ஜோலார்பேட்டை தொகுதியில் ஜொலிக்கப் போவது யார்?

ஜோலார்பேட்டை தொகுதியில் ஜொலிக்கப் போவது யார்?
Updated on
3 min read

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டத்தின் விஐபி தொகுதியாக ஜோலார்பேட்டை சட்டப் பேரவை தொகுதி கருதப்படுகிறது. 2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு ஜோலார் பேட்டை தொகுதி உருவாக்கப்பட்டு 2011-ம் ஆண்டு முதல் தேர்தலைச் சந்தித்து வருகிறது.

இதில், முதன்முறையாக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சி.வீரமணி அதிமுக அமைச் சரவையில் இடம் பெற்றுத் தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக அமைச்சராக வலம் வந்தார்.

இதுமட்டுமின்றி ஆசியாவிலேயே மிகப்பெரிய ரயில்வே யார்டுகளில் ஒன்று ஜோலார்பேட்டையில் உள்ளது. மேலும், நாட்டிலேயே மிகப்பெரிய ரயில்வே சந்திப்பான ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு, தமிழக சுற்று லாத் தலங்களில் ஒன் றான ஏலகிரி மலை இத் தொகுதியில் உள்ளது.

வேலூர் மாவட்டத் திலிருந்து திருப்பத்தூர் மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டபோது மாவட்ட தலைநகரமாக ஜோலார்பேட்டையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் அதிகமாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களுக்காக மாவட்ட தலைநகரம் திருப்பத்தூருக்குக் கொண்டு செல்லப்பட்டதே இத்தொகுதி மக்களிடையே பெருங்கவலையாக இன்று வரை உள்ளது.

இத்தொகுதியில், விவசாயம், தென்னை வளர்ப்பு, பீடித்தொழில், ரயில்வே சார்ந்த பணிகள் பிரதான தொழில்களாக உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் இத்தொகுதியின் வெற்றித்தோல்வியே பெரிதாகப் பார்க்கப்படுவதால் ஜோலார்பேட்டை தொகுதி விஐபி தொகுதியாக உள்ளது.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 3 தேர்தல்களைச் சந்தித்த ஜோலார் பேட்டை இந்த முறை 4-வது தேர்தலை எதிர்கொள்கிறது. நடந்து முடித்த 3 தேர்தலில் 2 முறை அதிமுகவும், ஒரு முறை திமுகவும் தொகுதியைக் கைப்பற்றியுள்ள நிலையில், 4-வது முறை நடைபெறும் இத்தேர்தலில் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக – திமுக இடையே தான் போட்டி நிலவுகிறது. அதேநேரத்தில் தவெகவும், நாதக கட்சி வேட்பாளர்களும் தங்கள் பங்கிற்குத் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அதிகாரமிக்க நபராக வலம் வந்த கே.சி.வீரமணி கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுகவிடம் தோல்வியைத் தழுவியதால் கடந்த 5 ஆண்டுகளாகச் சட்டப்பேரவை உறுப்பினராகக் கூட இல்லாமல் தொகுதி முழுவதும் அதிகாரம் இல்லாமல் சுற்றி வந்ததை அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தாரும் பெரிதாக ரசிக்கவில்லை.

இதுதவிர சொத்து விவரங்களை மறைத் தது, நிலத்தகராறு உள் ளிட்ட வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்துக்கு ஏறி இறங்கியதும் கே.சி.வீரமணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஆகையால் இத்தேர்தலில் எப்படியும் வெற்றியை பெற்றுவிட வேண்டும். விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.

களத்தில் 19 பேர் ​

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே.சி.வீரமணியும், திமுக சார்பில் கவிதா தண்டபாணியும், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் முனிசாமியும், நாம் தமிழர் கட்சி சார்பில் சசிரேகா உட்பட மொத்தம் 19 பேர் களத்தில் உள்ளனர். இதில், தற்போதைய எம்எல்ஏவான தேவராஜிக்கு திமுக தலைமை இந்த முறை வாய்ப்பு வழங்காமல் கவிதா தண்டபாணிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

எனவே, உட்கட்சி பூசல் திமுகவில் மேலோங்கும் என நினைத்து அதிமுக தரப்பினர் இந்த முறை வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஆனால், தான் தேர்வு செய்து அறிவித்த வேட்பாளர் தோற்க கூடாது, ஜோலார்பேட்டை தொகுதி மீண்டும் அதிமுக வசம் செல்லக்கூடாது என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் எச்சரித்ததால் திமுக மாவட்டச் செயலாளரில் தொடங்கி, கிளைச்செயலாளர் வரை அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் பிரச்சாரத்தை வழக்கம்போல தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இது மட்டுமின்றி திமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்பி. கனிமொழி ஆகியோரும் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளனர். விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பிரச்சாரம் செய்ய ஜோலார்பேட்டை வர உள்ளதாக திமுகவினர் கூறிவருகின்றனர்.

ஜோலார்பேட்டை நகர்ப் பகுதியைச் சேர்ந்த கவிதா தண்டபாணி கிராமப்புற மக்களின் வாக்கு தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது என்பதை உணர்ந்து கிராமம் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேநேரத்தில், கடந்த 5 ஆண்டு களாகத் தொழில், வீடு, நண்பர்கள், அவ்வப்போது கொஞ்சம் அரசியல் என சுற்றி வந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி இந்த முறை நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்கும், அதற்கு நான் வெற்றிபெற்றால் தான் மீண்டும் அமைச்சராக முடியும்.

அப்படி அமைச்சர் ஆனால் தொகுதி தேவையான எல்லா திட்டங்களையும் கொண்டு வர முடியும். மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஜோலார்பேட்டை தொகுதி முழுவதும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தியதைப் போல, அதிமுக ஆட்சியின் இறுதியில் கொண்டு வர இருந்த பல்வேறு திட்டங்களை மீண்டும் செயல்படுத்த முடியும் என்பதால் இந்த முறை மீண்டும் தன்னை எம்எல்ஏவாக்க வாக்காளர்கள் மட்டுமின்றி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கே.சி.வீரமணி தனது தேர்தல் பிரச்சாரத்தில் முன்னெடுத்து வருகிறார்.

இந்த முறை என்ன ஆனாலும், எவ் வளவு செலவானாலும் பரவாயில்லை விட்ட இடத்தை பிடித்தே தீர வேண்டும் என்ற தன் கணக்கை கே.சி.வீரமணி தொடங்கியுள்ளார். முக்கிய அரசியல் பிரதான கட்சிகளால் 4 முனை போட்டி என கூறப்பட்டாலும் தேர்தல் பிரச்சாரத்தை வைத்துப் பார்க்கும்போது திமுக – அதிமுக இடையே தான் போட்டி நிலவுகிறது. ஜோலார்பேட்டை தொகுதி அதிமுக வசமா? இல்லை திமுக வசமா என்பது மே 4-ம் தேதி தெரிந்துவிடும்.

கோரிக்கைகள்

* படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர சிப்காட் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

* இயற்கை வேளாண்மை, இயற்கை யான முறையில் எரிவாயு, சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்டவை தொகுதியில் ஏற்படுத்த வேண்டும்.

* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைக் கொண்டு வர வேண்டும்.

* பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். ஏலகிரி மலையில் சுற்று லாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இது தவிர ஏலகிரி மலையைத் தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றி, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

​* ஒரு சில குக்கிராமங்களில் இன்னும் குடிநீர் தட்டுப்பாடு நிலவு கிறது. இதைத் தவிர்க்க அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் தடையில்லா குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

​* ரயில்வே கிராசிங் அதிகம் உள்ள பகுதி என்பதாலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,16,714

  • பெண் - 1,19,393

  • மூன்றாம் பாலினத்தவர் - 20

  • மொத்த வாக்காளர்கள் - 2,36,127

ஜோலார்பேட்டை தொகுதியில் ஜொலிக்கப் போவது யார்?
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in