

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ரமேஷ்.
திருச்சி: கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு, திருச்சியில் அவரது சிலைக்கு நேற்று அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியது: முதல்வர் விஜய் தனித்து விடப்பட்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், சட்டப்பேரவையில் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலின்தான், இன்று சட்டப்பேரவை நிகழ்வுகளை வீட்டில் இருந்து பார்க்கக்கூடிய நிலைமைக்கு தனித்து விடப்பட்டிருக்கிறார்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த ஆந்திர பெண்ணிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து கோயில்களிலும் ஒரு சிலரால் இதுபோன்று நடக்கிறது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக சம்பந்தப்பட்டதுறை அமைச்சர் ஆய்வு நடத்தி வருகிறார். நிதிநிலையை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் அ மைச்சர் செந்தில் பாலாஜி ஓடி ஒளியவில்லை என்றால், இத்தனை நாள் எங்கிருந்தார், நீதிமன்ற நடைமுறைகளை தைரியமாக பின்பற்றி இருக்க வேண்டியதுதானே? கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
எந்தெந்த கோயில் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன, என்ன தவறுகள் நடந்திருக்கின்றன, யார் யாருக்கு இதில் தொடர்பு இருக்கிறது என ஆய்வு செய்து வருகிறோம். கோயில் சொத்துகளை பாதுகாக்கவும், முறைகேடுகளை கண்டுபிடிக்கவும் குழுக்கள் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.