“தூய சக்தி என தம்பட்டம் அடிப்பவர்கள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல... துர்நாற்றம்” - தினகரன்

தினகரன் | கோப்புப் படம்
தினகரன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ‘குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர், தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல, சகிக்கவே முடியாத துர்நாற்றம்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டப்பேரவையில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காமராஜ் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.

கடந்த 8-ஆம் தேதியன்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த எஸ்.காமராஜை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக காமராஜ் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் விஜய், தமிழக ஆளுநரிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது.

அதனையடுத்து தமிழக ஆளுநருடனான சந்திப்பின் போது எஸ்.காமராஜ் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநரிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.

எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல, யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினகரன் | கோப்புப் படம்
பழனிசாமி Vs எஸ்.பி.வேலுமணி + சி.வி.சண்முகம் - மீண்டும் உடைகிறதா அதிமுக?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in