

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 69-வது இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை வரவேற்பு நேற்று நடந்தது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி - விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் 2026 - 27-ம் ஆண்டில் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 139 மாணவர்களுக்கு வெள்ளை அங்கி மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற இளஞ்சிவப்பு அக்டோபர் எனும் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 89-வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரியவில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2026- 27-ம் ஆண்டில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ள 237 மாணவர்களுக்கு வெள்ளை அங்கி மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிவித்து வரவேற்று, ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான பகல்நேர விடுதியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
மருத்துவ நெறிமுறைகள் சார்ந்த உறுதிமொழியை அமைச்சர்கள் முன்னிலையில் மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். கல்லூரி டீன் ஏ. அரவிந்த், துணை முதல்வர் ஆர்.சத்தியலட்சுமி, உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.