

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்.9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.4) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
செப்.5 முதல் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
செப்.9-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் நாளை முதல் செப்.7-ம் தேதி வரை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன் ஹீட் வரை உயரக்கூடும். கடலோர தமிழகத்தில் வழக்கமான அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை ( செப்.4) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழைப் பொழிவு:
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் திருவாதவூர், ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம், வாலாஜாவில் தலா 5 செ.மீ, ஆற்காடில் 4 செ.மீ, சேலம் மாவட்டம் ஏற்காடு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மாமல்லபுரம், செய்யூர், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், ஆரணி, மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.