

கோப்புப் படம்
சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜன.28-ம் தேதி முதல் பிப்.2-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து-வில் 5 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சியில் தலா 4 செ.மீ. மாஞ்சோலையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.27) லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜன.28-ம் தேதி முதல் பிப்.2-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜன.31-ம் தேதி வரை பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்கள் வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.