

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செப்.2) மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்றும், நாளையும் (செப்,1,2) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்.3-ம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். செப்.4-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
செப்.5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
உள் தமிழகத்தில் செப்-5-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரிவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (செப்.1,2) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதி, அந்தமான் கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் செப்.3-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்றுவீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி தேதிகள் வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.