‘‘தேர்தலில் வென்று காட்ட உறுதியேற்போம்” : தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கும் அதிமுக

‘‘தேர்தலில் வென்று காட்ட உறுதியேற்போம்” : தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கும் அதிமுக
Updated on
2 min read

சென்னை: சுற்றிச் சுழன்று தேர்தல் பணியாற்றி, சட்டமன்றத் தேர்தலில் வென்று காட்டுவோம் என உளமார உறுதி ஏற்கிறோம் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக சார்பில் தொண்டர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும்; தாய்மார்களின் முன்னேற்றத்திற்காகவும்; தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும்; பொற்கால ஆட்சியைத் தந்தவர் எம்.ஜி.ஆர்.

அவர் உருவாக்கிய மகத்தான மக்கள் இயக்கமாம் அதிமுகவை, நம் உயிரினும் மேலாகக் கருதி, எந்நாளும் காப்போம் என உளமார உறுதி ஏற்கிறோம்!

>> தன்னுடைய கலைப் பயணத்தினாலும், அரசியல் பணிகளாலும், ஆட்சியின் சிறப்புகளாலும், தமிழ் நாட்டில், உழைக்கும் மக்களின் உரிமைகளையும், தாய்க்குலத்தின் பெருமைகளையும், சமத்துவக் கொள்கைகளையும், உயர்வாக எண்ணி மதித்தவர்; மகிழ்ச்சியாய் மக்கள் வாழ்ந்திட, மக்களுக்காகவே, தன் வாழ்க்கையை, அர்ப்பணித்து வாழ்ந்தவர்; தமிழக மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும், நீக்கமற நிறைந்தவர். அத்தகையவர் எம்.ஜி.ஆர்.

>> எம்.ஜி.ஆர். தமிழ் மண்ணைத் தாயாகவும்; தமிழ் மொழியை உயிராகவும் நினைத்து, மக்கள் போற்றும் வண்ணம், மகத்தான மக்கள் ஆட்சியைத் தந்தவர்; தமிழக மக்களின் உள்ளங்களில் நிறைந்திருப்பவர். பசிப்பிணி தீர்த்து வைத்த பாரி வள்ளல், பார் புகழ நாடாண்ட இதய தெய்வம், அந்த மாபெரும் மனித நேயமிக்க, மானுடப் பற்றாளரின் நினைவுகளை நெஞ்சிலே தாங்கி, அவர் வழி நடப்போம் என உளமார உறுதி ஏற்கிறோம்!

>> தமிழ் நாட்டில், குடும்ப ஆட்சியை ஒழித்திடவும்; ஜனநாயகத்தைக் காப்பாற்றிடவும், புதிய எழுச்சியைத் தந்தவர், எம்.ஜி.ஆர். அவரால், மக்கள் துணையோடு உருவாக்கிய, உண்மையான ஜனநாயகத்தை, எந்நாளும் காப்போம்!

>> தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, வசனத்திலே புரட்சி! நடிப்பிலே புரட்சி! அரசியலிலே புரட்சி! என, புரட்சியின் வடிவமாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவர் காட்டிய புரட்சி வழியை, நாமும் பின்பற்றுவோம்... மக்களுக்குத் தொண்டாற்றுவோம் என, உளமார உறுதி ஏற்கிறோம்!

>> ஏழை, எளியவர்களின் நலனுக்காக, ஏற்றமிகு திட்டங்கள்! சமுதாயத்தில் பின்தங்கி இருக்கும், மக்களுக்காக திட்டங்கள்! பெண்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக திட்டங்கள்! உழைக்கும் தொழிலாளர்களுக்காக, உன்னதத் திட்டங்கள்! நெசவாளர்களுக்காக திட்டங்கள்! விவசாயிகளுக்காக பல திட்டங்கள்! மீனவப் பெருமக்களுக்காக திட்டங்கள், மாணாக்கர்களுக்காக திட்டங்கள் என்று, எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை, வகுத்துத் தந்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. இவ்விருபெரும் தலைவர்களின், முத்தான திட்டங்கள் தொடர்ந்திட; மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும்! அதற்காக, அயராது உழைப்போம் என உளமார உறுதி ஏற்கிறோம்!

>> பொய்யான வாக்குறுதிகள் பல தந்து, ஆட்சிக்கு வந்திட்ட, திமுக ஆட்சியிலே நீட்டுக்கு விலக்கு இல்லை; கல்விக் கடன் ரத்து இல்லை; சிலிண்டருக்கு மானியம் இல்லை; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை; தமிழக மக்களின் கேள்விகளுக்கு, பொம்மை முதல்வர் ஸ்டாலினிடம், பதில் இல்லை! பதில் இல்லை! போட்டோ ஷூட் நடத்தும், பொம்மை முதல்வரை வீட்டுக்கு அனுப்புவோம்! அதிமுக ஆட்சியை அமைத்து, கோட்டையிலே கொடி ஏற்றுவோம்!

>> கொடி பிடிக்கும் தொண்டனையும், கொள்கைப் பிடிப்புள்ள தொண்டனையும், எம்.ஜி.ஆரின், ரத்தத்தின் ரத்தங்களையும், ஜெயலலிதாவின், விசுவாசமிக்கத் தொண்டர்களையும் துரோகத்தால் வீழ்த்திவிட முடியாது! எதிரிகளும், துரோகிகளும், தீட்டும் திட்டங்கள் பலிக்காது! 2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வெற்றி என்பதே, நமது இலக்கு!

>> தமிழ் நாட்டில், மூன்று முறை ஆட்சியைப் பிடித்து; முடிசூடா மன்னராகத் திகழ்ந்திட்ட, நம் தலைவர், எம்.ஜி.ஆர். வழியில், ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று, தன் வாழ்வை அர்ப்பணித்த, தாயுள்ளம் கொண்டவர் ஜெயலலிதா ! ஆறு முறை, தமிழ் நாட்டின் முதல்வராகப் பதவி வகித்த, அசைக்க முடியாத மக்கள் சக்தியைப் பெற்ற, ஜெயலலிதாவின் வழியில் பயணித்து, இருபெரும் தலைவர்களின், பெரும்புகழைக் காப்போம்! வர இருக்கின்ற, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி என்னும் புகழ் மகுடத்தை சூட்டுவோம்! வீரம் மிக்க தொண்டர் படை; விசுவாசமிக்க தொண்டர் படை, ஆர்ப்பரிக்க உளமார உறுதி ஏற்கிறோம்!

>> நெருங்குகிறது 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல். பெருகுகிறது நமக்கு மக்கள் ஆதரவு. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் ஆசிகள் நமக்கு இருக்கிறது; நமக்கு இருக்கிறது! இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர் படை; `இரட்டை இலையை’ தாங்கும் வீரம் நிறைந்த தொண்டர் படை துணையோடு இரவு, பகல் பாராமல், சுற்றிச் சுழன்று தேர்தல் பணியாற்றி, சட்டமன்றத் தேர்தல் களத்தில் வென்று காட்டுவோம் என்று, உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘தேர்தலில் வென்று காட்ட உறுதியேற்போம்” : தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கும் அதிமுக
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது அமெரிக்க செயற்கைக்கோள் ‘புளூபேர்ட்’ - இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in