“தேர்தலில் அன்புமணியை மட்டும் எதிர்ப்போம்” - புதுக் கட்சியை தொடங்கிய ஜெ.குரு மகள்

“தேர்தலில் அன்புமணியை மட்டும் எதிர்ப்போம்” - புதுக் கட்சியை தொடங்கிய ஜெ.குரு மகள்
Updated on
2 min read

சேலம்: “வரும் தேர்தலில் ராமதாஸை எதிர்க்கவில்லை; அன்புமணியை மட்டும் எதிர்ப்போம்” என ‘ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி’யை தொடங்கிய ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் தனியார் திருமண மண்டபத்தில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி ஜெ.குருவின் மகள் குரு.விருதாம்பிகை, ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார். தொடர்ந்து கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

பாமக ஏற்கெனவே ராமதாஸ், அன்புமணி தரப்பு என இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவதாக ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி துவங்கப்பட்டுள்ளது.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “வன்னியர்களின் ஒற்றுமை காக்க கட்சி ஆரம்பித்திருக்கிறோம். அனைத்து சமுதாய மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என இக்கட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. வன்னியர் சங்கமும் இதற்காக தான் உருவாக்கப்பட்டது. கடைசியில் மகனுக்காக ராமதாஸ் பின்வாங்கிவிட்டார்.

எனது தந்தை குரு கடைசி வரைக்கும் இந்த சமுதாயத்துக்காக உழைத்தார். ராமதாஸை அன்புமணி தவறாக பேசுவது தவறு. பணத்தினால் தான் கட்சியில் பிரிவினை வந்துள்ளது.

வன்னியருக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என அதிமுகவில் அன்புமணி பேசி இருக்கலாம். எதற்கு அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். வன்னியர்களை ஓட்டுமொத்தமாக அடமானம் வைக்க அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறீர்கள். மாத்தி மாத்தி கூட்டணி வைத்த அன்புமணி பாஜக, அதிமுகவிடம் 10.5 சத இட ஒதுக்கீடு கேட்கவில்லை.

பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆர்எஸ்எஸ் கைக்கூலியாக அன்புமணி உள்ளார். அரசியல் லாபத்திற்காக காசு பணத்திற்காக கூட்டணி அமைத்திருக்கிறீர்கள்.

வன்னிய அறக்கட்டளையை மீட்டெடுக்க தான் கட்சி ஆரம்பித்திருக்கிறோம். மக்கள் பணத்தில் ஆரம்பித்த அறக்கட்டளையில், உங்களால் இலவச கல்வி கூட தர முடியாத நிலையில் எதற்கு கட்சி நடத்துகிறீர்கள்.

எனது தந்தை விட்டு சென்ற பயணத்தை நான் தொடர்வேன். வன்னிய சமுதாயம் பின் தங்கிய நிலையில் உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி எனது தந்தை பிறந்த தினத்தை வன்னியர் தினமாக கொண்டாட இருக்கிறோம். ராமதாஸ் ஒரு பக்கம் அவரது மகளை எம்எல்ஏ ஆக்க முயற்சிக்கிறார். அன்புமணி அவரது மனைவியை எம்எல்ஏ ஆக்க முயற்சிக்கிறார்.

ராமதாஸ் கஷ்டமான நிலையில் உள்ளதால், அவரை எதிர்க்க மாட்டோம். அன்புமணியை மட்டுமே எதிர்ப்போம். சமுதாய மக்களுக்கு நல்லது செய்யவே புதிய கட்சி துவங்கியுள்ளேன். எங்களை நம்பி எங்களுடன் பாமகவினர் வருவார்கள். அன்புமணிக்கு எதிராக தேர்தல் பணி, பிரச்சாரம் செய்வோம். அன்புமணி செய்த ஊழல் குறித்து மக்களிடம் பேசுவோம். ஜெ.குரு பாமகவுக்கு எதிர்ப்பு வந்தால் சந்திக்க தயாராக உள்ளார்.

திமுக ஆட்சியில் தான் வன்னியர்களுக்கு நல்லது செய்கின்றனர். கருணாநிதி 20 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தார். ஸ்டாலின் இறந்தவர்களுக்கு மணி மண்டபம் கட்டி கொடுத்தார். நடிகர் விஜய் மக்களுக்கு எதுவும் நல்லது செய்யவில்லை. அஞ்சலை அம்மாளை கொள்கை தலைவராக கொண்ட விஜய், வன்னியர்களுக்காக, ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை, இட ஒதுக்கீட்டிற்கு குரல் கொடுக்கவில்லை. அரசியல் லாபத்திற்கு கட்சி துவங்கி, ஒவ்வொரு சாதியிலும் ஒருவரை தேர்வு செய்து கொள்கை தலைவர்களாக வைத்துள்ளார்.

அரசியலில் இருந்து அன்புமணியை விரட்டும் வரை நாங்கள் போராடுவோம். சவுமியா அன்புமணி நிற்கும் தொகுதியில் நான் போட்டியிடுவேன். எங்கள் கட்சி சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம். காசு பணம் உள்ளவர்கள் கட்சி தொடங்கி மாநாட்டை நடத்துகிறார்கள். நாங்கள் அப்படி இல்லாமல் வன்னிய மக்களுக்காக உழைப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

“தேர்தலில் அன்புமணியை மட்டும் எதிர்ப்போம்” - புதுக் கட்சியை தொடங்கிய ஜெ.குரு மகள்
“மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்தை ‘மாற்றி’ அறிவித்து ஏமாற்றிய ஸ்டாலின்” - இபிஎஸ் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in