

செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்
சென்னை: ‘குதிரை பேரத்தை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது’ என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “முதல்வராக யார் பதவியேற்றாலும் பிரதமரை சந்திப்பது வழக்கமான நடைமுறைதான். ஏற்கெனவே கேரள முதல்வர் சந்தித்திருக்கிறார். அந்த வகையில் தமிழக முதல்வரும் சந்திக்கிறார்.
தமிழக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அதை முதல்வரும் வலியுறுத்துவார் என நம்புகிறோம். மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டால் நாங்கள் அதை எதிர்ப்போம். தமிழக உரிமையை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
குதிரை பேரத்தை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிராவில் குதிரை பேரத்தை காங்கிரஸ் கண்டித்தது. இதுதான் அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும். ‘ஐந்து மாநிலத் தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் இருக்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் ஏற்றுவார்கள்’ என்றோம். அதைத்தான் மத்திய பாஜக அரசு இப்போது செய்திருக்கிறது” என்றார்.