

சிவகங்கை: மதவாத சக்திகளை சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையோடு தவெகவுக்கு ஆதரவு என தெரிவித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தவெகவை இண்டியா கூட்டணிக்கு கொண்டு வருவோம் எனத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக நுழையக் கூடாது என்பதை வலியுறுத்திதான், திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்த முறை 3 விதமான தீர்ப்புகளை மக்கள் கொடுத்துள்ளனர். தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் பாஜக நுழைந்துவிடும்.
இந்தக் காரணத்துக்காகத் தான் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைக்கிறது. எக்காரணம் கொண்டும் மதவாத சக்திகளை சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையோடுதான் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. திமுகவிடமிருந்து பிரிந்து வரவில்லை; ஒரு கருத்தை முன்னிறுத்திதான் கூட்டணி வைக்கிறோம். இண்டியா கூட்டணியில் மிக முக்கியக் கட்சி திமுக.
பாஜகவின் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி திமுக ஆட்சி நடத்தியது. நாடாளுமன்றத்தில் ராகுல்காந்திக்கு உறுதுணையாக இருந்தனர். இண்டியா கூட்டணியில் உள்ள திமுகவை இழந்துவிட்டு, வேறு கட்சியுடன் கூட்டணி வைப்பது சரியில்லை என்பதால்தான் கூட்டணி தொடர்ந்தது. மேலும், திமுகவுடன் கூட்டணி முறிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. தமிழக காங்கிரஸூக்கு புதிய தலைவருக்கான அறிவிப்பு விரைவில் வரும். தவெகவுடனான கூட்டணி 2029 மக்களவைத் தேர்தலிலும் தொடரும். தவெகவை இண்டியா கூட்டணிக்கு கொண்டு வருவோம்.