

ஸ்ரீவில்லிபுத்தூர்: இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவதுதான் எங்கள் இலக்கு. அதிக தொகுதிகளைப் பெற்றால்தான் ஆட்சியில் பங்கு குறித்து பேச முடியும் என்று விசிக பொதுச் செயலாளர் வன்னியரசு கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பராசக்தி படம், மொழிப்போர் தியாகிகள் குறித்து இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்கு உதவியாக உள்ளது. தற்போது பாஜக மீண்டும் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக கட்டமைக்க முயல்கிறது.
பாஜகவின் முன்னெடுப்புக்கு எதிராக தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது. தவெக விஜய், நாம் தமிழர் சீமான் ஆகியோர் பாஜகவை எதிர்க்க வேண்டும். துணிவின்றி அவர்களோடு சமரசம் ஆகி விடுகிறார்கள்.
தமிழக இளைஞர்கள் விஜய், சீமானிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாதிய பாமக, மதவாத பாஜகவோடு எப்போதும் விசிகவுக்கு உறவு கிடையாது. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியது நாங்கள்தான். இந்த தேர்தலில் விசிக இலக்கு இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவதுதான். அதிக இடங்களை பெற்றால்தான் ஆட்சியில் பங்கு குறித்து பேச முடியும். பாஜகவை வீழ்த்துவதுதான் எங்களது ஒற்றை நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.