

மன்னார்குடி அருகே சோழபாண்டியில் நேற்று நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசிய வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை.
திருவாரூர் / சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும் என அதன் நிறுவனர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழபாண்டியில் 15 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியை வீ த லீடர்ஸ் அமைப்பினர் நேற்று மேற்கொண்டனர். இந்நிகழ்வில் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்துப் பேசியதாவது: ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கினால் தான், ஆரோக்கியமான அரசியலை பேச முடியும்.
கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, இதே மன்னார்குடியிலும், தாராபுரத்திலும் இப்போது எம்எல்ஏக்களாக இருக்கக் கூடியவர்களுக்கு வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தேன். தற்போது அந்த எம்எல்ஏக்கள் வெற்றிபெற்ற பின்னர், வாக்களித்த மக்கள் கையில் இருந்த மை காய்வதற்குள் அந்த கட்சியிலேயே இல்லை.
இத்தகைய அரசியலை உடைக்க வேண்டும். இதுபோன்ற ஒருமோசமான அரசியலுக்குள் நாம் போக்கூடாது. இதனால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் 234 தொகுதியிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் தலைவர்களை உருவாக்க வேண்டும். இதற்காக உள்ளாட்சித் தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும். இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில், வீ த லீடர்ஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கருநாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கேக் திட்டம் மறுபரிசீலனை: ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் ஊடகம், பிரச்சாரம், மக்கள் தொடர்பு பொதுச் செயலாளர் அஸ்பயர் கே.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கு கேக் வழங்குவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், 61.84 லட்சம் குழந்தைகளுக்கு பேக்கேஜ் கேக் வழங்கும் திட்டத்தின் மிகப்பெரிய அளவுதான் கவலை அளிக்கிறது. கேக்கில் 30 நாட்கள் கெடாமல் இருப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சர்க்கரை, கொழுப்பு மற்றும் கலோரி அளவு குறித்த ஊட்டச்சத்து விவரங்களையும் வெளியிட வேண்டும்.
ஒரு முன்னோட்டத் திட்டத்தில் பரிசோதனை செய்யப்படும் குழுவினர் அல்ல, 61.84 லட்சம் குழந்தைகள். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்ட பிறகு விசாரணை நடத்துவதைவிட, அது ஏற்படாமல் தடுப்பதே நல்ல நிர்வாகமாகும். எனவே, இத்திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முழுமையான விளக்கத்தை அளிக்கும் வரை, லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு கேக் வழங்கும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.