

விழுப்புரம்: பழநியில் ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை முறைகேடாக பதிவு செய்த விவகாரத்தில் அமைச்சர் ரமேஷுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த அறக் கட்டளை நிர்வாகி முருகதாஸின் மனைவி தெரிவித்தார்.
பழநியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, முறைகேடாக தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் கவுமார மடாலய தலைவரும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவருமான முருகதாஸுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையில் விழுப்புரம் காமராஜர் நகரில் உள்ள முருகதாஸ் வீட்டுக்கு சிபிசிஐடி போலீஸார் 18-ம் தேதி சென்றனர். பூட்டியிருந்த வீட்டின் கதவையும் உள்ளே இருந்த பீரோவையும் உடைத்து, அதிலிருந்த சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் வீட்டுக்கு சீல் வைத்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
வீட்டில் யாரும் இல்லாததால் குடும்பத்துடன் முருகதாஸ் தலைமறைவாகிவிட்டதாக சிபிசிஐடி போலீஸார் குறிப்பிட்டனர். இந்நிலையில் முருகதாஸ் மற்றும் அவரது மனைவி லீலா ஆகியோர் நேற்று காலை வீடுதிரும்பினர். தகவலின்பேரில் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாரிடம் சாவியை பெற்று வீட்டை திறந்தனர்.
இதுதொடர்பாக லீலா கூறியதாவது: பழநியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்தை எனது மாமா நிர்வகித்து வந்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை. மடத்துக்குச் சொந்தமான இடம் தானமாக வழங்கப்பட்டதுதான். திருவாமாத்தூரில் உள்ள கவுமார மடாலயத்தை விஸ்தரிப்பு செய்வதற்காக, பழநியில் உள்ள மடத்து சொத்தை விற்பனை செய்ய முடிவு செய்தோம். எங்களை வழக்கறிஞர் ஒருவர் அணுகினார். ரூ.2 கோடி தருவதாக தெரிவித்தார். அவரது பேச்சை நம்பி, எனது கணவர் முருகதாஸ் கையொப்பமிட்டார்.
ஆனால் எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை. வழக்கறிஞருடன் நடத்திய அனைத்து உரையாடல்களுக்கும் ஆதாரம் உள்ளது. முறைகேடாக பத்திரப்பதிவு என்பது தெரியாது. இந்த வழக்கில் எனது கணவர் பெயரையும் இணைத்துள்ளதால் சிபிசிஐடி விசாரணைக்கு நானும், எனது கணவர் முருகதாஸும் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு கடந்த 18-ம் தேதி சென்றோம்.
நாங்கள் உள்பட மடத்துடன் தொடர்புடைய 7 பேர் ஆஜரானார்கள். 2 நாட்களாக விசாரணை நடத்திவிட்டு பின்னர் எங்களை விடுவித்தனர். எனது கணவர் முருகதாஸ், திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் அவர் வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளார். அதற்குள் நாங்கள் தலைமறைவாகிவிட்டதாக தவறான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.
நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. தலைமறைவாகவும் இல்லை. அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராவோம். இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும்இல்லை. எங்கள் வீட்டில் இருந்துகவுமார மடாலயத்தின் சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றி இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.