

தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து 12 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 17-ம் தேதி 5 மணி அளவீட்டின் போது விநாடிக்கு 9,500 கனஅடியாக நீர்வரத்து பதிவானது. அன்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்தது. நேற்று காலை 6 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. ஆனால், காலை 10 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாகக் படிப்படியாகக் குறைந்தது.
இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 8,555 கனஅடியாகவும், மாலை விநாடிக்கு 12,174 கனஅடியாகவும், நேற்று காலை விநாடிக்கு 12,350 கனஅடியாகவும் உயர்ந்த நீர்வரத்து மாலையில் விநாடிக்கு 12,243 கனஅடியாக குறைந்தது.
குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் 82.98 அடியாகவும், நீர் இருப்பு 44.99 டிஎம்சியாகவும் உள்ளது.