

காரைக்கால்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்ட மேடை அருகே பறந்த ட்ரோன் வீழ்த்தப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரைக்காலில் திருநள்ளாறு சாலையையொட்டி உள்ள சந்தைத் திடலில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்று நண்பகல் 12.45 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, பொதுக்கூட்ட மேடையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் முருகராமு திரையரங்கம் அருகே பறந்த ட்ரோன் திடீரென செயலிழந்து தரையில் விழுந்தது.
அந்தப் பகுதியில் மாடியில் இருந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீஸார் இதைப் பார்த்துள்ளனர். இதையடுத்து, போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் அங்கு சென்று ட்ரோன் எங்கிருந்து, யாரால் பறக்கவிடப்பட்டது என விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: திருநள்ளாறு வடக்குத் தெருவைச் சேர்ந்த யோகேஷ்(27) என்பவர் ட்ரோனை பறக்கவிட்டது தெரியவந்தது. அவர், காரைக்கால் திருநள்ளாறு சாலையில் செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் பழுது நீக்கும் கடை வைத்துள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு சென்று யோகேஷிடம் விசாரணை நடத்தினர்.
அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பொது நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் பணியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும், அந்த வகையில் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்வையும் வீடியோ பதிவு செய்யும் நோக்கில் ட்ரோனை பறக்கவிட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும், ட்ரோன் பறக்க விட தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்றும் யோகேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் அவரை எச்சரித்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டனர்.
பின்னர், காரைக்கால் நகர போலீஸார் யோகேஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவரது சமூக வலைதள பக்கங்கள், பின்புலம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, தீங்கு விளைவிக்கும் நோக்கம் அவருக்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, எச்சரித்து அனுப்பினர்.
அதேநேரத்தில், தடையை மீறி ட்ரோன் பறக்கவிட்டதற்காக போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்காந்த அலை: இதற்கிடையே, அமித் ஷா பங்கேற்ற கூட்டத்தின் மேடையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பாதுகாப்பு படையின் ட்ரோன் எதிர்ப்புப் பிரிவு படையினர், மின்காந்த அலை வீச்சு மூலம் ட்ரோனை செயலிழக்கச் செய்து வீழ்த்தியதாகவும், மேடையை நோக்கி வானில் பறந்து வந்த ட்ரோன், மேடை இருக்கும் பகுதியில் குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் முன்னேற முடியாமல் தாமாகவே செயலிழந்து விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும், கீழே விழுந்த ட்ரோன் இதுவரை கண்டறியப்படவில்லை. அதுகுறித்தும் போலீஸார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், அமித்ஷா வருகையின்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்ததை ட்ரோன் சம்பவம் உணர்த்துவதாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.