

சென்னை: குடிநீர், உப்பு, சர்க்கரை பாக்கெட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடியில் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ எனும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன்படி மைக்ரோ பிளாஸ்டிக்கால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படும் நிலையில் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்கள், சர்க்கரை, உப்பு பாக்கெட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என்பதை சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை வாசகங்களாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக சுற்றறிக்கை பிறப்பிக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும், அந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி சுற்றுச்சூழலுக்கான பெட் பேக்கேஜிங் சங்கம் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மைக்ரோ பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என்ற உத்தரவை மறுஆய்வு செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.