“திமுகவுக்கு வாக்களிப்பது உதயநிதியை முதல்வராக்கவே உதவும்” - பியூஷ் கோயல்

“திமுகவுக்கு வாக்களிப்பது உதயநிதியை முதல்வராக்கவே உதவும்” - பியூஷ் கோயல்
Updated on
2 min read

மதுரை: “தமிழகத்தின் கலாச்சாரம், பெருமையை மதிக்காத உதயநிதியால் தமிழக முதல்வராக வர முடியாது. திமுகவுக்கு வாக்களிப்பது உதயநிதியை முதல்வராக்குவதற்கு தான் உதவும். ஒரு குடும்பத்தின் ஆட்சி தொடர அனுமதிக்கக்கூடாது” என மதுரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தொழில்துறையினருடனான கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளன. ரவுடிகள் ராஜ்ஜியம் அதிகமாக உள்ளது. இது வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு போதை பொருள் நடமாட்டம் முக்கிய காரணமாக இருக்கிறது. போதை பொருள் பழக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்றபோது போதையால் இளைஞர்கள் பாதை மாறுவதை தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு அழகான மாநிலம், அழகான கோயில்கள், கடற்கரைகள் உள்ளன. சுற்றுலாவுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் நேரடியாக மதுரைக்கு வர முடியும். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் சுற்றுலா வளர்ச்சி இல்லாமல் உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் தொழில்துறையினர் தமிழகத்துக்கு வர தயங்குகின்றனர்.

கடந்த 12 ஆண்டுகளில் உள் கட்டமைப்பு வசதிகளுக்கு பிரதமர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடு 500 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துறைமுக சரக்கு போக்குவரத்து இரு மடங்கு அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே ஆகியவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களின் எண்ணிக்கை 78-ல் இருந்து 160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 24 மணி நேரமும் தொழில்துறை, விவசாயிகள், வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மரபுசார் ஆற்றலால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைந்துள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 4 கோடி குடும்பங்களுக்கு இலவச வீடு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் 2 கோடி குடும்பங்களுக்கு வீடு வழங்கப்படும்.

தமிழ்நாட்டுக்கு 9 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதை பயன்படுத்த தவறிவிட்டனர். இதில் 3 லட்சம் பேருக்கு இன்னும் வீடுகள் வழங்கப்படவில்லை. இது வேதனையானது. மத்திய அரசின் திட்டங்களை தடுப்பதில் தான் மாநில அரசு ஆர்வமாக உள்ளது. திமுக மத்திய அரசில் பங்கு வகித்தபோது வழங்கிய நிதியை விட தற்போது இரு மடங்கு அதிகமாக நிதி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதி தான் இப்போதும் உள்ளது. திமுக ஆட்சியில் உள்கட்டமைப்பு வசதி எதுவும் செய்யப்படவில்லை. திமுக அரசு கரப்சன், கமிஷன், கலெக்சனில் தான் முன்னுரிமை வழங்குகின்றனர். உள்கட்டமைப்பு வசதிக்கு முன்னுரிமை வழங்க மறுக்கின்றனர்.

தமிழகத்தில் டெண்டர், ஒப்பந்தம், நில ஒதுக்கீடு, குவாரி உரிமம், மதுபான தொழில், இட மாறுதல், பணி நியமனங்களில் ஊழல்கள் நடைபெறுகின்றன. திமுகவில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், கனிமொழி என தலைவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஊழலும் அதிகரித்துள்ளது. மதுரை மாநகராட்சியையும் விட்டு வைக்கவில்லை. மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் செய்துள்ளனர். மின் கட்டணம் உயர்ந்துள்ளது. நிலக்கரி கொள்முதல், மின்மாற்றி வாங்குவதில் ஊழல் செய்து மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் சுமையை போட்டுள்ளனர்.

தமிழகத்துக்கு ரூ.12 லட்சம் கோடி முதலீடு வந்திருப்பதாக முதல்வர் கூறுகிறார். மதுரைக்கு எதாவது முதலீடு வந்துள்ளதா?. மத்திய அரசு எதையும் தரவில்லை. மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக இருக்கிறது என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் எப்படி பிஎம் மித்ரா திட்டத்தில் தமிழ்நாடு முறையாக விண்ணப்பித்ததால் விருதுநகரில் ஆயிரம் ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்க அனுமதி வழங்கியிருக்கும்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுக்கவில்லை. இத்திட்டத்துக்கான முழு திட்ட அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சரி செய்து அனுப்புமாறு மத்திய அரசு கூறியது. இதுவரை தமிழக அரசு பதிலளிக்கவில்லை. மத்திய அரசு பலமுறை நினைவூட்டிய போதும் தமிழக அரசு பதிலளிக்கவில்லை. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய வேண்டியதுள்ளது. இதற்கான நிலத்தை தமிழக அரசு தரவில்லை.

உதயநிதி தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பெருமையை மதிப்பதில்லை. அவர் எப்போதும் தமிழகத்தின் முதல்வராக வர முடியாது. திமுகவுக்கு வாக்களிப்பது உதயநிதியை முதல்வராக்குவதற்கு தான் உதவும். ஒரு குடும்பத்தின் ஆட்சி தொடர அனுமதிக்கக்கூடாது. இதனால் ஒரு குடும்பம் தான் பயனடையும். திமுகவினருக்கும், மக்களுக்கும் எந்த பயனும் இல்லை.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக இம்பீச்மென்ட் கொண்டு வந்து தவறு செய்தனர். ஏப். 23 தமிழக வரலாற்றின் முக்கியமான நாள். தமிழகத்தில் மாற்றத்துக்கான நல்ல நேரம் வந்துள்ளது. இந்த வாய்ப்பை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மே 4ல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். ஊழல் ஒழிக்கப்படும். எல்லா துறையிலும் வளர்ச்சி எட்டப்படும். தமிழகத்தின் வளர்ச்சி, கலாச்சாரம், பெருமை, வளமான வரலாறு பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

“திமுகவுக்கு வாக்களிப்பது உதயநிதியை முதல்வராக்கவே உதவும்” - பியூஷ் கோயல்
“தவெக ஆட்சியில் ஏஐ அமைச்சகம் உருவாக்கப்படும்” - கன்னியாகுமரியில் விஜய் வாக்குறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in