“நிலவு ஒருநாள் அமாவாசை காணும்” - திமுகவில் இணைந்தபின் விஜய்யை விமர்சித்த பி.டி.செல்வகுமார்

“நிலவு ஒருநாள் அமாவாசை காணும்” - திமுகவில் இணைந்தபின் விஜய்யை விமர்சித்த பி.டி.செல்வகுமார்
Updated on
1 min read

சென்னை: “நிலவு ஒருநாள் அமாவாசையாகும். ஆனால் சூரியன் என்றும் பிரகாசிக்கும். தவெகவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கே மரியாதை இல்லை. அப்புறம் என்னைப் போன்றோருக்கு சொல்லவா வேண்டும்.” என்று திமுகவில் இணைந்த தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

முன்னதாக இன்று காலை தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமையகத்தில், இன்று (11-12-2025) காலை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளிக் கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும் கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மக்கள் சேவகரும் - “தென் மாவட்டங்களில் சிறந்த கல்வி நன்கொடையாளர்” விருது பெற்றவருமான ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனத்  தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

பின்னர் செல்வகுமார் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது: விஜய் ஒரு நடிகர். அவரது புகழ் ஒரு நிலவைப் போன்றது. நிலவு ஒருநாள் அமாவாசை காணும். நடிகர்களின் மக்கள் சேவையும் அவ்வாறே மறைந்துபோகும். ஆனால் சூரியன் அப்படியல்ல. அதன் ஒளி நிரந்தரமானது. 

தவெகவில் என்னைப் போன்றோர் நிறைய உழைப்பைச் செலுத்தியுள்ளோம். ஆனால், விஜய் சொன்னதுபோல் தவெகவில் ரசிகர்களுக்கு எந்தப் பொறுப்பும் தரப்படவில்லை. விஜய்யை சுற்றி இருக்கும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ஆனந்த் வெங்கட்ராமன், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் என யாரும் அவருடைய ரசிகர்களாகக் களப் பணியாற்றியவர்கள் அல்ல. நானெல்லாம் விஜய்க்காக அவ்வளவு உழைப்பைச் செலுத்தியுள்ளேன். என்னைப் போன்றோருக்கு கட்சியில் மரியாதை இல்லை. அங்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கே மரியாதை இல்லை. அப்புறம் என்னைப் போன்றோருக்கு சொல்லவா வேண்டும்.

நம்மைச் சுற்றி நல்லவர்கள் இருக்க வேண்டும். நல்லவர்கள் இருந்தால்தான் நாம் வளர முடியும். விஜய்யைச் சுற்றி தீய சக்திகள் தான் உள்ளன.

விஜய்க்கு தலைமைக்கான பக்குவம் வேண்டும். அதற்கு நல்ல பயிற்சியாளர்கள் அவருக்கு அமைய வேண்டும். விஜய்க்கு சேரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. விஜய் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டும். களத்தில் இறங்கி மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும். அதைவிடுத்து யாரையாவது குற்றஞ்சாட்டிக் கொண்டே இருந்தால் அதனால் எந்தப் பயனில்லை.

நான் மக்கள் சேவையை விரும்புகிறேன். ஆனால் அங்கே என்னால் அதை செய்ய முடியாது. அதைச் செய்வதற்கான கட்டமைப்பு திமுகவில் உள்ளது. எனக்கு இங்கே அங்கீகாரம் உள்ளது. அதான், நான் இங்குதான் பயணப்பட முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

“நிலவு ஒருநாள் அமாவாசை காணும்” - திமுகவில் இணைந்தபின் விஜய்யை விமர்சித்த பி.டி.செல்வகுமார்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in