

ஏ.பாலகிருஷ்ணன்
நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் ஏ.பாலகிருஷ்ணன் (88) நேற்று முன்தினம் இரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஏ.பாலகிருஷ்ணன், 1981 முதல் 2001 வரை அகில இந்திய விவேகானந்தா கேந்திர பொதுச் செயலாளராகவும், 2001 முதல் 2020 வரை துணைத் தலைவராகவும், 2020 முதல் விவேகானந்தா கேந்திர தலைவராகவும் பணியாற்றி வந்தார்.
விவேகானந்தா கேந்திர நிறுவனர் ஏக்நாத்ஜி ரானடேவிடம் நேரடியாக பயிற்சி பெற்ற இவர், விவேகானந்தரின் லட்சியங்களை பரப்பும் பணிக்கு, வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்தவர். வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் விவேகானந்தா கேந்திராவின் சமூகத் தொண்டுகளை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறையால் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏ.பாலகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை (29-ம் தேதி) மதியம் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் நடைபெறுகிறது.
பிரதமர் புகழாரம்: பாலகிருஷ்ணனின் மறைவுக்கு தனது எக்ஸ் தளப் பதிவில்பிரதமர் மோடி குறிப்பிட்டு இருப்பதாவது: விவேகானந்தா கேந்திரவின் அகில இந்திய தலைவராகப் பணியாற்றிய ஏ.பாலகிருஷ்ணன் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.
சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளுக்காகவும், சமுதாயப் பணிக்காகவும் தனது வாழ்வின் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான காலத்தை பாலகிருஷ்ணன் அர்ப்பணித்தார். விவேகானந்தா கேந்திரவின் ஆரம்பகால ஜீவன்வர்த்திகளில் ஒருவரான அவர், நாடு முழுவதும் அயராது உழைத்தார். வடகிழக்கு மாநிலங்களுடன் அவர் மிகவும் ஆழமான தொடர்பைக் கொண்டிருந்தார்.
கல்வி, சமூகம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் அவர் முக்கியப் பங்காற்றினார். விவேகானந்தா கேந்திர குடும்பத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் பாலகிருஷ்ணனுடன் தாம் இருக்கும் புகைப்படங்களையும், பிரதமர் பகிர்ந்துள்ளார்.
இதுபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் (பொ) விஸ்வநாத் அர்லேக்கர் உள்ளிட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் கன்னியாகுமரி வந்திருந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாகர்கோவில் மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலகிருஷ்ணனிடம் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.