

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியது. பூக்கள் மற்றும் பழங்கள் விலை உயர்ந்தாலும், கடைசிநேரத்தில் ஆர்வமுடன் மக்கள் வாங்கிச் சென்றனர்.
விநாயகப் பெருமானின் அவதார திருநாளைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத வளர்பிறையில் சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இன்றைய தினம் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், சாம்பார் சாதம், பொங்கல், கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளன.
பல இடங்களில் அன்னதானத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
சாலை ஓரத்தில் திடீர் கடைகள் அமைக்கப்பட்டு பொரி, ஆப்பிள், ஆரஞ்ச், சாத்துக்குடி, மக்காச்சோளம், கொய்யா பழங்கள், கரும்பு, தென்னங்கீற்று ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்றன.
கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்திருந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.1500லிருந்து ரூ.2000 ஆகவும், சாமந்தி ரூ.120லிருந்து ரூ.250 ஆகவும், முல்லை ரூ.300லிருந்து ரூ.900 ஆகவும், சம்பங்கி ரூ.50லிருந்து ரூ.500 ஆகவும் விற்பனையானது.
பூக்களைப் போல் பழங்களின் விலையும் உயர்ந்திருந்தது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.220லிருந்து ரூ.250 வரையும், இறக்குமதி ஆப்பிள் ரூ.250 முதல் ரூ.300 வரையும், மாதுளை ரூ.180லிருந்து ரூ.200 வரையும், ஆரஞ்சு ரூ.200 முதல் 250 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும், சாத்துக்குடி ரூ.60 முதல் ரூ.80 வரையும், பன்னீர் திராட்சை ரூ.120 முதல் 150 வரையும், பச்சை திராட்சை ரூ.150 முதல் ரூ.200 வரையும், கருப்பு திராட்சை ரூ.150, சப்போட்டா ரூ.60, கொய்யா ரூ.100 முதல் ரூ.150 வரையும் விற்பனையானது. வாழை இலையும் விலை கடுமையாக அதிகரித்துக் காணப்பட்டது. ஒரு தலைவாழை இலை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது.
சுபமுகூர்த்த தினங்களும், விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாக இணைந்து வந்ததால், பூ மற்றும் பழங்களின் விலை பல மடங்கு உயர்ந்திருந்த போதிலும், மக்கள் தங்களின் பண்டிகைக் கால உற்சாகத்தில் சற்றும் சளைக்காமல் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
தமிழகம் முழுவதும் கோயில்களில் விரிவான பாதுகாப்பு மற்றும் பிரசாத ஏற்பாடுகளுடன் இந்த ஒரு வார கால ஆன்மிகத் திருவிழா தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.