

மதுரை: விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு கோவில்பட்டி மூதாட்டி கொலை வழக்கில் அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியதை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
விளாத்திக்குளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் கோவில்பட்டியில் மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்.
இந்த தண்டனையை ரத்து செய்யவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கவும் கோரி தர்மமுனீஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மூதாட்டி கொலையில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்கியது. அப்போது தூத்துக்குடி நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனை அடிப்படையில் தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு செல்லும் போது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து கைதாகியுள்ளார்.
இதையடுத்து மூதாட்டி வழக்கில் தர்மமுனீஸ்வரனின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு இன்று விசாரித்து, மூதாட்டி கொலையில் தர்மமுனீஸ்வரனுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதே கோரிக்கை தொடர்பாக விளாத்திக்குளம் மாணவியின் பெற்றோர் தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அரசு மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் மாணவியின் பெற்றோர் மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை என்று கூறி மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.