

‘ஹாலோகிராம்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவெக தலைவர் விஜய் நேரில் பிரச்சாரம் செய்வது போல புதிய முயற்சியை கும்பகோணம் தவெக வேட்பாளர் மேற்கொண்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தை அடிக்கடி ரத்து செய்து வருவதால், அவரது கட்சியினர் அதிருப்தியடைந்து வருகின்றனர். மற்ற கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தங்கள் கட்சித் தலைவர் இன்னும் தங்கள் பகுதிக்கு பிரச்சாரம் செய்ய வரவில்லையே என நினைக்கும் தவெக வேட்பாளர்கள் புதிய புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி, விஜய்யின் சிலையை தனது பிரச்சார வாகனத்தில் வைத்து வாக்கு சேகரிக்கும் பணி மேற்கொண்டார். அதேபோல, கொளத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு, டூப்ளிகேட் விஜய் போல உள்ள நபரை தன்னுடன் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினார். தற்போது அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதி தவெக வேட்பாளர் வினோத், ‘ஹாலோகிராம்’ தொழில்நுட்பத்தில் தனது பிரச்சார வாகனத்தில் விஜய் நேரில் பேசுவது போல ‘3டி’ பிம்பத்தில் வடிவமைத்து பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியினர் கூறுகையில், ‘‘விஜய் முகம் காட்டினாலே போதும், பெருவாரியான வாக்கு கிடைக்கும். எனவே, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வாடகையில் ஹாலோகிராமம் தொழில்நுட்பத்தில் விஜய் நேரில் பிரச்சாரம் செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இந்த யுக்தியை பயன்படுத்தி பிரச்சாரம் செய்வோம்” என்றனர்.