

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நேற்று 2-ம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர், மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து பேரணியாக நினைவிடத்துக்கு வந்து, மரியாதை செலுத்தினர்.
பேரணியில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவாக தலைவர் வேல்முருகன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம், திராவிட வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காலைமுதலேதேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்தனர். அவர்களுடன் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று, மரியாதை செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘ஏழைகள் மீது பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் உயர்ந்த உள்ளத்தால் தமிழ்மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற அருமை நண்பர் விஜயகாந் தின்நற்பணிகளை நினைவு கூர்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘இயன்றதைச் செய்வோம்இல்லாதவர்க்கே என்ற கோட்பாட்டுடன் வாழ்ந்த விஜயகாந்தின் நினைவுநாளில் கலைத் துறையிலும், பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்’ என கூறியுள்ளார்.
இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், பாமக தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், தவெக தலைவர் விஜய் உள்ளிடோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.