

தாராபுரம் தொகுதியில் விஜய்யின் மெழுகுச் சிலையை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் சத்யபாமா.
தாராபுரம்: தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா, முதல்வர் விஜய்யின் மெழுகுச்சிலையுடன் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட மூலனூர் ஒன்றியம் அண்ணாநகர், வேன் ஸ்டாண்ட், கடைவீதி, பேருந்து நிறுத்தம், பெரியார் நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று தவெக வேட்பாளர் சத்யபாமா வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, தனது பிரச்சார வாகனத்தின் முகப்பில் முதல்வர் விஜய்யின் தத்ரூபமான மெழுகுச் சிலையை வைத்தபடி மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். மெழுகுச் சிலையை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.
அப்போது பேசிய சத்யபாமா, “இங்கே உங்களுக்காக நின்றுகொண்டிருப்பது நம்ம விஜய் அண்ணன் தான். எனக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும்,
நேரடியாக நம்ம விஜய்க்கு அளிக்கும் வாக்குக்குச் சமம். இத்தொகுதியில் நான் வெற்றி பெற்றால், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதியைச் சோலைவனமாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக மேற்கொள்வேன்” என வாக்குறுதி அளித்தார்.
இரட்டை இலைக்கு... இதனிடையே தாராபுரம் மூலனூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்தார். அப்போது, பழக்கதோஷம் காரணமாக ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரினார். இதனைக் கேட்டு வேட்பாளர், தவெகவினர் சிரித்தனர். உடனடியாகத் தனது தவறை திருத்தி ‘விசில்’ சின்னத்தில் வாக்களிக்க கோரினார்.