

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய்
சென்னை: “மதச்சார்பற்ற கொள்கையில் தவெக உறுதியாக உள்ளது. தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம்” என அக்கட்சியில் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ‘எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை’ என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் இன்று இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து, பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி என பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்கள். தவெக எந்த டீமிலும் இல்லை. மக்கள் டீமில் தான் இருக்கிறது என தெரிந்ததும் வேறு என்ன அவதூறு பரப்பலாம் என யோசித்தனர்.
தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம். அதில் உறுதியாக இருக்கிறோம். மதச்சார்பற்ற கொள்கை, மற்றும் மதச்சார்பற்ற சமூக நீதியில் தவெக உறுதியாக உள்ளது. அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் எந்தவித சமரசமமும் வைத்துக்கொள்ள போவதில்லை. இது குறித்த பேச்சுகே இடமில்லை. யார் என்ன அவதூறு பரப்பினாலும், அதை நம்ப வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த டார்கெட்டை அடைய முடியும்” என்று அவர் தெரிவித்தார். இதன்மூலம் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடுவதை அவர் உறுதி செய்தார்.
தவெக தனித்துப் போட்டி: தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக மற்றும் புதிதாக இணைந்துள்ள தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. கடந்த கால கசப்புகளை மறந்து மீண்டும் இணைந்துள்ள அதிமுக, பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கைகோத்திருக்கின்றன. வழக்கம்போலவே தேர்தலில் தனித்து நிற்பது என்ற ஒற்றை இலக்குடன் சீமான் களம் காண்கிறார். இந்தச் சூழலில் தவெகவின் ‘தனித்து போட்டி’ என்ற முடிவு, தமிழக அரசியலில் நான்குமுனை போட்டியை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பாஜக மேலிடம், குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வரத் தீவிர முயற்சி எடுத்ததாகத் தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் திமுகவை வீழ்த்த விஜய்யின் வாக்கு வங்கி அவசியம் என பாஜக கருதியது. இதற்காக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டணிக்குத் தூது வந்தவர்களிடம் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்தன. “90 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்; இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும்” என்ற நிபந்தனைகளை விஜய் தரப்பு முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததால், கூட்டணிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் முடிந்ததாகத் தெரிகிறது. இதை மையமாக வைத்து கட்சிக்குள் பொதுச் செயலாளர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவி வந்ததாகச் செய்திகள் கசிந்தன.
சமீபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “என்ன நடந்தாலும் வரும் தேர்தலில் நாம் தனித்து தான் போட்டியிடுகிறோம்” எனத் தெள்ளத் தெளிவாகக் கூறிய விஜய், மோதலில் இருந்த நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தி தேர்தல் பணிகளை வேகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக பாஜக தரப்பில் கூட்டணிக்கான முயற்சி நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் தவெக தலைவர் விஜய் தற்போது தமது கட்சியின் நிலைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.