

சென்னை: “கட்சித் தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, தவெக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது,” என அக்கட்சியின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிரமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நிர்வாகிகளால் ஏற்படும் பல்வேறு சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக, தவெக தலைமை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது. பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும்.
முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.