தமிழக ஆளுநருடன் விஜய் மீண்டும் சந்திப்பு: அடுத்தது என்ன?

தமிழக ஆளுநருடன் விஜய் மீண்டும் சந்திப்பு: அடுத்தது என்ன?
Updated on
1 min read

சென்னை: தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரை இரண்டாவது முறையாக சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைத் தவெக கோரியிருந்தது.

இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. மீதமுள்ள இடங்களுக்காக மற்ற கட்சிகளுடன் தவெக நிர்வாகிகள் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று 108 சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன், ஆர்.வி.அர்லேகரை நேரில் சந்தித்து விஜய் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சமர்ப்பித்தார். புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளுநருடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆளுநர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தவெக.வுக்கு ஆதரவு அளிக்கும் 118 எம்எல்ஏக்கள் அடங்கிய பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் கையொப்பம் அடங்கிய கடிதத்தை முழுமையாகச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்த நிலையில் இன்று (மே 07) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் இரண்டாவது முறையாக வருகை தந்தார். அங்கு ஆளுநரை சந்தித்த அவர் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை அடங்கிய கடிதத்தை சமர்ப்பித்தார்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததாகவும், விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை, அதனால் சட்ட வல்லுநர்களுடன் அவர் ஆலோசனையில் இருக்கிறார் என்றும் பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வரவில்லை.

இதற்கிடையில், ஆளுநர் அரசமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனும், தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பதே சரியென்று விசிக தலைவர் திருமாவளவனும் தெரிவித்துள்ளனர். விஜய்யின் கூட்டணி கோரிக்கை பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, விஜய் பதவியேற்பதற்காக ஏற்பாடுகள் நடந்த நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு தவெக ஆதரவாளர்கள், விஜய் ரசிகர்கள் வந்து செல்வதையும் காண முடிகிறது.

தமிழக ஆளுநருடன் விஜய் மீண்டும் சந்திப்பு: அடுத்தது என்ன?
விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு: ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது போன்ற தவறை மீண்டும் செய்கிறதா காங்கிரஸ் ?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in