“இண்டியா கூட்டணி பிரதமர் வேட்பாளருக்காக விஜய் பிரச்சாரம் செய்வார்” - மாணிக்கம் தாகூர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய்யை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம்” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்தார்.

தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம், பனையூரில் இன்று நடைபெற்றது. தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.

இன்று நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக்குப் பின்னர் தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ பெயர் சூட்டப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டது. இது மிகவும் பலமான கூட்டணியாக இருக்கும். நடைபெறவுள்ள 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்.

சமூக நீதி, மதசார்பின்மையின் அடிப்படையில் தமிழகத்தின் நன்மைக்காக இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நேர்மையான ஆட்சி தமிழகத்தில் தொடர நாங்கள் இக்கூட்டணிக்கு ஆதரவு தருகிறோம்.

‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யின் தலைவராக முதல்வர் விஜய்யை நாங்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம். அவரின் ஒருங்கிணைப்பில் இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இந்தக் கூட்டணி விஜய் தலைமையில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் செயல்படும்.

‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என்பது இண்டியா கூட்டணியின் ஒரு பகுதி. இண்டியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. 2029-ல் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படும் போது இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். அப்போது இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளருக்காக முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்வார்.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான். அதே நேரத்தில் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை, அந்தக் கூட்டணி கட்சிகள் முடிவு செய்யும். இண்டியா கூட்டணி வேட்பாளரை ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ ஏற்றுக்கொள்ளும்” என்றார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தவெக தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in