

மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நேற்று நடந்த மகளிர் தின விழாவில்...
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500, திருமணத்துக்கு பட்டுப் புடவையுடன், ஒரு பவுன் தங்கம், மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தாய் அல்லது பாதுகாவலருக்கு ரூ. 15 ஆயிரம் , ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்ற விழா நேற்று மாமல்லபுரத்தில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. அதில் விஜய் பேசியதாவது: சிங்கப் பெண்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். ஒரு ஊரில் ஒரு பெரிய கோயில் யானை இருந்தது. அது உஷாரான யானை.
யாராலும் ஏமாற்ற முடியாது. ஆனால், ஒரு ஜகஜால கில்லாடி அந்த யானையை ஏமாற்றிவிட்டார். எப்படி என்றால் தேங்காய் முடிக்குள் சுண்ணாம்பை வைத்துக் கொடுத்திருக்கிறார். அந்த யானையும் சாப்பிட்டுவிட்டது. பிறகு ‘ஏமாத்துறதெல்லாம் தொழில் ரகசியம் ஐயாச்சாமி' என அந்த ஆள் தன் நண்பனிடம் பெருமை பேசியிருக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து அந்த நண்பர்கள் மீண்டும் சந்தித்திருக்கிறார்கள்.
'நான் மீண்டும் ஏமாற்றி காட்டுகிறேன்' என அந்த ஜகஜால கில்லாடி சொல்கிறான். வாழைப் பழத்தை வாங்கி அதில் பஞ்சைத் திணித்து யானைக்கு மீண்டும் கொடுக்கிறான். இப்போது யானை தும்பிக்கையைச் சுழற்றி அவனை வீசி எறிகிறது. அந்த யானைதான் நம்முடைய வாக்காளர்கள். ஜகஜால கில்லாடிகள் யார் என நீங்கள் நினைப்பதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
தேர்தல் வாக்குறுதிகள்: பெண்கள், குழந்தைகள், முதியோருக்கான தனி இலாகா அமைக்கப்படும். அது என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையாக வெறும் ரூ.1000 மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதை வைத்து மளிகை சாமான் கூட வாங்க முடியவில்லை. எனவே 60 வயது வரையுள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதாமாதம் ரூ.2500 வழங்கப்படும். இதில், மாநில, மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மட்டும் விதி விலக்கு.
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் மூலம் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அண்ணன் சீர் திட்டம் மூலம் பெண்களின் திருமணத்துக்கு தரமான பட்டுப் புடவையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படும். காமராஜர் கல்வி உறுதித் திட்டத்தின் வாயிலாக மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித் தொகை கொடுப்போம்.
வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம். இதன் மூலம் தமிழகம் முழுவதும் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் ராணி வேலுநாச்சியார் படை ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சாதாரண உடையில் கேமராக்களுடன் பெண்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.
அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள் திட்டம் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். பொது போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக ஸ்மார்ட் பேனிக் பட்டன்கள் அமைக்கப்படும். அது 24 மணி நேர கட்டளை மையத்துடன் இணைக்கப்படும். சிசிடிவி கேமரா, விளக்குகள் அனைத்து இடங்களிலும் ஏற்படுத்தப்படும்.
ரேஷன் கடைகள், பள்ளி-கல்லூரிகளில் இலவச நாப்கின்கள் வழங்கப்படும். சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள கடன்கள் திருப்பி செலுத்தப்படும். கூடவே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரையில் வட்டியில்லா கடன் கொடுக்கப்படும். சுய உதவிக்குழுக்களில் பதிவு செய்து குறு, சிறு நிறுவனங்களாக மாறுவோருக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மானியம் வழங்கப்படும்.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், பேபி வெல்கம் கிட்டும் வழங்கப்படும். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் வரும் நாட்களில் நான் அறிவிப்பேன்.
தமிழகத்தில் போடப்படும் பட்ஜெட்டில் 20 சதவீதம் முதல்வருக்கும், 10 சதவீதம் அமைச்சர்களும் செல்கிறது. மக்களுக்கு ஒதுக்கப்படும் தொகையை முழுவதும் அவர்களுக்கே செலவு செய்துவிட்டால் சூப்பரான அரசை கொடுக்கலாம். அரசிடம் பணம் இல்லை என்கிறீர்கள். பிறகு எப்படி விடியற்காலையில் அனைவரது கணக்கிலும் ரூ.5 ஆயிரம் போட்டீர்கள். எனவே அரசிடம் பணம் இருக்கிறது, ஆனால் அதில் பற்றாக்குறை இருக்கிறது.
அதற்கு காரணம் ஸ்டாலின் சார் வரி தான். இதை நீக்கினாலே அனைத்தும் சரியாகிவிடும். சமீபமாக நிறைய பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்காக நீங்கள் வருந்துவதைப் பார்க்க முடிகிறது. அதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் எல்லாரும் சேர்ந்து மக்கள் பிரச்னைகளைப் பார்ப்போம். அவ்வளவு எல்லாம் வருத்தப்படாதீர்கள். அது ‘வொர்த்’ இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.