

தவெக தலைவர் விஜய்
பனையூரில், தவெக சார்பில் போட்டியிடுவோருக்கான 2-ம் கட்ட நேர்காணல் நேற்று நடந்தது. இதில், மேலும் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலில் தனித்தே போட்டி என அறிவித்திருக்கும் நடிகர் விஜய், தவெக வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் பனையூரில் நடைபெற்ற முதற்கட்ட நேர்காணலில் 60 பேர் வேட்பாளர்களாக இறுதி செய்யப்பட்டனர். அவர்களுக்குத் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு விஜய் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்று இரண்டாம் கட்டமாக 50 பேரிடம் விஜய் நேர்காணல் நடத்தினார்.
கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்த நேர்காணலில், கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். குறிப்பாக, ஆயிரம் விளக்கு தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ-வான ஜே.சி.டி.பிரபாகரும், மதுரவாயல் தொகுதிக்கு கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்க உரிமையாளரின் மகனும் கலந்து கொண்டனர்.
இந்த இரண்டு கட்ட நேர்காணல்களின் மூலம் இதுவரை 110 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அடுத்த வார இறுதிக்குள் விஜய் இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலிலும் தவெக தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அங்கு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வரும் என தவெக எதிர்பார்த்தது. அது நடக்காது என்று முடிவாகிவிட்டதால் அங்கும் 30 தொகுதிகளிலும் தனித்தே களமிறங்க முடிவெடுத்துள்ளார் விஜய்.
இதையடுத்து புதுச்சேரிக்கான வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று (சனிக்கிழமை) அறிவிக்கிறார். அங்கு வரும் 23-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால், திங்களன்று தவெக வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். வேட்புமனு தாக்கலைத் தொடர்ந்து, அடுத்த வாரம் புதுச்சேரியில் விஜய் சூறாவளி பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.