டெல்லி புறப்பட்டார் விஜய்: நாளை சிபிஐ அலுவலகத்தில் 2ஆம் கட்ட விசாரணை!

நடிகர் விஜய் | கோப்புப் படம்

நடிகர் விஜய் | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் 2 வது முறையாக விசாரணைக்கு ஆஜராவதற்காக தவெக தலைவர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டார். நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025 செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டும், 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் பல்வேறு ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் திரட்டினர்.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஜன.12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ கடந்த 6-ம் தேதி சம்மன் அனுப்பியது. இதனையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் ஜனவரி 12ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

குறிப்பாக, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? இதுதொடர்பாக காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் என்னென்ன தகவல்கள் பரிமாறப்பட்டன? 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வாங்கப்பட்ட நிலையில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதா?. திட்டமிட்ட நேரத்தைவிட சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன்? உங்கள் வருகை தாமதம் ஆனதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததே நெரிசலுக்கு காரணம் என்ற புகாருக்கு உங்கள் விளக்கம் என்ன? என்பது உட்பட பல கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர்.

விஜய் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர். அன்று மாலை 6.15 மணி அளவில் விசாரணை முடிந்த பிறகு, காரில் விஜய் புறப்பட்டுச் சென்றார். விஜய்யிடம் சிபிஐ சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.

இதனையடுத்து, அடுத்​தகட்ட விசா​ரணைக்​காக ஜன.19-ம் தேதி டெல்லியில் மீண்​டும் ஆஜராகுமாறு ​விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. எனவே, சிபிஐ அலுவலகத்தில் 2 ஆம் கட்ட விசாரணைக்காக விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். நாளை அவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார்.

<div class="paragraphs"><p>நடிகர் விஜய் | கோப்புப் படம்</p></div>
“கோவளம் நன்னீர் தேக்க திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்” - சீமான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in