

பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படம்: மு. லெட்சுமி அருண்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். ரோடு ஷோ நடத்த 51 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சி தலைவர் விஜய் இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் இன்று காலை வரும் விஜய், அங்கிருந்து பாளையங்கோட்டைக்கு சாலை மார்க்கமாக வருகிறார். கேடிசி நகரில் பகல் 12 மணிக்கு நடைபெறும்பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கிருந்து புறவழிச்சாலை வழியாக தாழையூத்துக்கு செல்கிறார்.
பின்னர், தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி,சமாதானபுரம் வரை திறந்த வேனில் இருந்தபடி ரோடு ஷோ நடத்துகிறார். பின்னர், தூத்துக்குடி சென்று, அங்கும் ரோடு ஷோ நடத்துகிறார். பின்னர், தனி விமானத்தில் சென்னை செல்கிறார். பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவல் துறையினர் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை பிரச்சாரத்தைத் தொடர்ந்து தூத்துக்குடிக்கும் செல்கிறார் பிரச்சாரம் ரத்தாகிறது என்ற வதந்திகளுக்கு இடமில்லை. திட்டமிட்டபடி பிரச்சாரம் நடக்கும். இது ஒருமுக்கியமான மக்கள் சந்திப்பு நிகழ்வு. இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி,ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்ல வசதி, ரோடு ஷோ நடத்தும்போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்கள் பின்தொடர வேண்டும், விஜய்யின் வாகனத்தை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடரக்கூடாது உள்ளிட்ட 51 நிபந்தனைகள் விதித்து காவல்துறை அனுமதி அளித்துள்ளது.