

சென்னை: சமூக வலைதளங்களை முக்கிய கருவியாக பயன்படுத்தி விஜய் வெற்றி வாகை சூடியுள்ளார். விஜய்யின் பிரச்சாரம் செல்போன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மக்களைச் சென்றடைந்தது.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியை கடந்த 2024-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி தொடங்கினார். விஜய்யின் அரசியல் வருகையை பலரும் வரவேற்றனர். முக்கிய கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருந்த நிலையில், தனக்கென சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொள்ள விஜய் முடிவு செய்தார்.
வசதி படைத்தவர்கள் முதல் சாதாரண தொழிலாளர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் இருப்பதால், அதன் வழியாக தனது தேர்தல் பிரச்சாரத்தை அவர்களிடம் கொண்டு செல்ல விஜய் முடிவுசெய்தார். தவெக கட்சிக்கென தனியாக யூடியூப் சேனல் தொடங்கப்பட்டது. அதேபோல் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் பேஜ்கள், கணக்குகள் தொடங்கப்பட்டது.
இவற்றைப் பின்பற்றி அவரது ரசிகர்கள், ஆதரவாளர்கள், கட்சியினரும் தவெக பெயரில் பல்வேறு யூடியூப் சேனல்கள், பேஜ்கள், கணக்குகளைத் தொடங்கினர். விஜய்க்கும் தவெகவுக்கும் ஆதரவாக தொடர்ந்து பதிவிட்டனர். அதேநேரம் விமர்சனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்தனர்.
தவெகவின் வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்வுகள், விஜய்யின் ரோடு ஷோ, பிரச்சாரங்கள், மேடைப் பேச்சுகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் முழுவதுமாக வெளியிடப்பட்டது. ரீல்ஸ்களாகவும், விஜய்க்கு கூடும் கூட்டங்கள் புகைப்படங்களாகவும் வெளியானது.
குறிப்பாக கடைசி சில நாட்களில் நடந்த பிரச்சாரத்தின் போது தூத்துக்குடி, திருப்பூர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விஜய்க்காக கூடிய லட்சக்கணக்கான கூட்டங்களின் வீடியோக்கள், புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது; அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தது.
முக்கியமாக தவெகவின் பாடல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பட்டி தொட்டி எங்கும் செல்போன் மூலம் விஜய்யின் பிரச்சாரம் சென்றடைந்தது. இதனால் விஜய்க்கு தமிழகம் முழுவதும் பெரிய அளவில் ஆதரவு அலை வீசத் தொடங்கியது. அந்த ஆதரவு அலை விஜய்க்கு தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளது.