“எங்கள் கூட்டணிக்கு தவெக வந்தால் மகிழ்ச்சி தான்!” - தமாகா விடியல் எஸ்.சேகர் விருப்பம்
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலம்பொருந்திய அணியாக கட்டமைக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். இந்த நிலையில், அக்கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான விடியல் சேகரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.
தமிழருவி மணியன் தனது கட்சியை தமாகாவுடன் இணைப்பது எந்தளவுக்கு உங்களுக்கு பலன் தரும்?
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், வரும் 20-ம் தேதி தனது இயக்கத்தை தமாகா-வுடன் இணைக்கவுள்ளார். அவர் மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இலக்கியவாதி, தமிழ் ஆர்வலர், தேசிய சிந்தனைவாதி. உலகப் பொருளாதாரம், அரசியல் வரலாறுகளைத் தெரிந்த அவர், இணைவது தமாகா-வுக்கு பலமும், பெருமையும் சேர்க்கும். தமாகா-வின் வளர்ச்சிக்கு வித்திடும்.
ஓபிஎஸ்ஸும் டிடிவி.தினகரனும் பாஜக அணியை விட்டுப் போனது பற்றி என்ன நினைக்கிறீர்கள்... அவர்களை மீண்டும் உள்ளே கொண்டுவர முயற்சி எடுக்கிறீர்களா?
நான்கரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து, தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது. அவரதுதலைமையில் பாஜக, தமாகா கூட்டணி அமைத்துள்ளது. ஓபிஎஸ், டிடிவி.தினகரனை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து என்டிஏ முடிவு செய்யும்.
கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரும் என்கிறாரே வாசன்... அப்படி யாரை எல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்?
திமுக-வை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் சேர வேண்டும் என்பது தமாகா-வின் விருப்பம். அந்த வகையில், திமுக-வை எதிர்க்கும் தவெக தலைவர் விஜய் எங்கள் கூட்டணிக்கு வந்தால் ரொம்ப மகிழ்ச்சி தான்.
இம்முறை தமாகா எதை முன்வைத்து தேர்தலைச் சந்திக்கும்?
ஆளும் திமுக அரசு, மக்கள் விரோத, ஊழல் மலிந்த அரசாக உள்ளது. இந்த அரசை அகற்ற வேண்டும் என்பது மட்டும் தான் எங்கள் குறிக்கோள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பதையெல்லாம் மறந்துவிட்டு, மக்கள் நலன் ஒன்றே பெரிது என்று சிந்திக்கும் முதல்வர் தான் தமிழகத்துக்குத் தேவை. அப்படியான சிந்தனை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.
விசிக, நாதக போல் தமாகாவும் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு அங்கீகாரம் பெறுவது எப்போது?
பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தனி சின்னத்தில் நிற்க வேண்டும் என்றால், குறைந்தது 5 சதவீத இடங்களில் போட்டியிட வேண்டும். அதாவது, மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளிலும், சட்டப்பேரவை தேர்தலில் 12 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 6 இடங்களில் தமாகா போட்டியிட்டது.
இந்த முறை 12 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து தமாகா செயற்குழு கூடி முடிவு செய்யும். இருப்பினும் தற்போதைய நிலையில், ஊழல் நிறைந்த, திமுக-வின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மீண்டும் அதிமுக தலைமையிலான நல்லாட்சி வரவேண்டும் என்பது தான் எங்களின் ஒரே குறிக்கோள்.
எம்பி பதவிக்காகத்தான் அதிமுக - பாஜக கூட்டணியில் வாசன் இருப்பதாகச் சொல்கிறார்களே..?
இது தவறானது. கட்சி மற்றும் தலைவரின் செல்வாக்கை வைத்து எம்.பி. பதவி கொடுக்கப்பட்டது. எம்.பி. பதவி முக்கியம் அல்ல. அப்பழுக்கற்ற, நேர்மையான தலைவரான ஜி.கே.வாசன் 9 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். காமராஜர், மூப்பனாருக்குப் பிறகு யாராலும் குறை சொல்ல முடியாத தலைவர் ஜி.கே.வாசன். அவர் வளர்ந்து வருவது தமிழகத்துக்கு நலன் தரும்.
அதிமுக - பாஜக கூட்டணி மாதக் கணக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறதே..?
தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சி அதிமுக. அதனுடன் மத்தியில் ஆளும் பாஜக, தமாகா கூட்டணி அமைத்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும். திமுக கூட்டணியில் பல குளறுபடிகள் இருப்பது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. காங்கிரஸின் நிலைப்பாடு தடுமாற்றத்தில் உள்ளது. திமுக கூட்டணி பலமிழந்த கூட்டணியாக மாறும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது எங்கள் கூட்டணிக்கு பலம் சேர்க்கும்.
என்டிஏ ஆட்சி அமைத்தால் அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா..?
தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள். அதன் பிறகு தான் மற்றவை எல்லாம். ஆகவே, தற்போதைக்கு அதற்கான கேள்வி எழவில்லை.
