புதுச்சேரியில் பாரதி இல்லத்தில் சிலையை திறந்து வைத்த குடியரசு துணைத் தலைவர்

புதுச்சேரியில் பாரதி இல்லத்தில் சிலையை திறந்து வைத்த குடியரசு துணைத் தலைவர்
Updated on
1 min read

புதுச்சேரி: பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த இல்லத்தில், அவரது சிலையை திறந்து வைத்து குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலரஞ்சலி செலுத்தினார்.

புதுச்சேரிக்கு வந்த குடியரசுத் துணைத் தலைவர் அரசு நிகழ்வில் பங்கேற்றார். அதையடுத்து பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்கு சென்றார். அங்கு மலர்களால் இல்லம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புதிதாக பாரதியார் சிலையை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

பாரதி பற்றி குடியரசு துணைத் தலைவர் முன்னதாக அரசு விழாவில் பேசுகையில், “பாரதி புதுவைக்கு வந்தபோதுதான் முழு சுதந்திரத்தை சுவாசித்தார். புதுவையில் 10 ஆண்டுகள் பாரதி வாழ்ந்த போதுதான் ‘இந்தியா’, ‘விஜயா’ போன்ற பத்திரிகையை நடத்தினார். கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற மகத்தான படைப்புகள் புதுவையில்தான் உருவானது.

‘செந்தமிழ் தென் புதுவை’ என பாரதி பாடியுள்ளார். பாரதியார் புதுவையில் இருந்த காலத்தில் தத்துவ ஆய்வுகளிலும் ஞான தேடல்களிலும் அவர் மூழ்கியிருந்தார். ‘நல்லதோர் வீணை செய்தே நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ, வல்லமை தாரோயா மாநிலம் பயனுற வாழ்வதற்கே ’ என்றார். ‘அறிவை மட்டும் தந்தால் போதாது, வல்லமையும் தர வேண்டும்’ என்றார்.

பாரதி புதுவையில் வாழ்ந்த காலம், ‘நவீன தமிழ் இலக்கியத்தின் பொற்காலம்’ என அறிஞர்கள் போற்றுகின்றனர். இங்குதான் வவேசு அய்யர், பாரதிதாசன் உட்பட பலர் தமிழின் அறிவுச்சுடராக புதுவையை மாற்றினர். இன்றும் கூட பாரதியின் தனி தத்துவத்தை போற்றி பாதுகாக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

பாரதியின் இல்லத்தை பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர் அங்குள்ள குறிப்பேட்டில் பாரதி பற்றி எழுதினார். அதில், “பாரதியின் எழுத்துகள் என்றும் தேசீயத்தை இந்த மண்ணில் காக்கும். தமிழ் உள்ளங்களில் ஓர் நீங்காத மாபெரும் இடத்தை பெற்றவர் தேசிய கவி. அவர் புதுச்சேரியில் 10 ஆண்டுகள் சுதந்திர காற்றை சுவாசித்து வாழ்ந்தார் என்பது இந்த மண்ணுக்கு பெருமை” என குறிப்பிட்டிருந்தார். அப்போது துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.

புதுச்சேரியில் பாரதி இல்லத்தில் சிலையை திறந்து வைத்த குடியரசு துணைத் தலைவர்
கோயிலில் எப்போதும் தெய்வத்துக்கே முதல் மரியாதை: சென்னை உயர் நீதிமன்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in