

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தினமலர் 75-ம் ஆண்டு பவளவிழா சிறப்பு அஞ்சல்தலையை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மேஜர் மனோஜ், தினமலர் மதுரை பதிப்பாளர் எல்.ராமசுப்பு, கோவை பதிப்பாளர் எல்.ஆதிமூலம், திரு நெல்வேலி, நாகர்கோவில் பதிப்பாளர் ஜெயஸ்ரீ வைத்தியநாதன், வேலூர் பதிப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, திருச்சி பதிப்பு ஆசிரியர் ஆர்.ராமசுப்பு ஆகியோர் பங்கேற்றனர். படம்: எல்.சீனிவாசன்
சென்னை: ‘பத்திரிகை பணி என்பது உண்மையைப் பாதுகாப்பதற்கான தர்மயுத்தம் போன்றது’ என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தினமலர் நாளிதழ் நேற்று 75-ம் ஆண்டை நிறைவு செய்தது. இதையொட்டி நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் ‘தினமலர்’ இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: ஒரு பத்திரிகை நடத்துவதே கடினம். அதை நடுநிலையோடு நடத்துவது அதைவிட கடினம்.
75 ஆண்டுகள் ஓயாமல், உண்மையின் குரலாக ஒலிப்பது, நடைமுறையில் எவ்வளவு கடினம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. 1951-ல் ஆரம்பிக்கப்பட்ட தினமலர் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தினமலர் பிறந்த இடத்திலேயே போராடிய பத்திரிகை. திருவனந்தபுரத்தில் தொடங்கினா லும், அந்த சமஸ்தானத்தின் சிலபகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று போராடிய போராளியாக ராமசுப்பையர் இருந்திருக்கிறார்.
தேசியமும், தெய்வீகமும் நமது இரு கண்கள் என்று உணர்த்தியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அவருக்குப் பின், அதை இந்த மண்ணில் நிலைநிறுத்தும் மகத்தான கடமையை தினமலர் செய்து வருகிறது.
எந்த இடத்திலும், யார் தவறு செய்தாலும் அதை துணிந்து தவறு என்று கூறுவதுதான் பத்திரிகை தர்மம். பத்திரிகையை லாபகரமாக நடத்த, பல்வேறு விதமான சமரசம் செய்து கொள்ளாமல், தான் கொண்ட நிலைப்பாட்டில் நின்று உண்மையை உரக்கச்சொல்வதோடு, தன்னையும் நிலைநிறுத்தும் பத்திரிகையாக தினமலர் இருப்பது பாராட்டுக்குரியது.
பத்திரிகை பணி என்பது தொழிலோ, வியாபாரமோ அல்ல. அது உண்மையைப் பாதுகாப்பதற்கான தர்ம யுத்தம். இன்று பத்திரிகை அச்சிடும் செலவில் பாதி விலைக்குதான் விற்கிறார்கள். விளம்பரங்கள் இல்லாமல் பத்திரிகை நடத்துவது சாத்தியமில்லை. ஆனாலும், அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், உள்ளதை உள்ளபடி உரத்த குரலாக ஒலிப்பது மகத்தான பொதுச்சேவை.
நம்மிடம் தர்மமும், வாய்மையும் இருக்கும்போது, உலகில் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை. பல்வேறு தேர்தல்களில் தமிழகத்தில் தேசியம் தோல்வியை தழுவிக் கொண்டிருந் தாலும், அதையும் தாண்டி தேசிய உணர்வு இன்றும் மங்காமல் இருப்பதற்கு தினமலர் முக்கிய காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, “கடந்த 1951-ம் ஆண்டு, செப்.6-ம் தேதி பிறந்த தினமலருக்கு, இன்றுடன் 75 வயதாகிறது. தேசியம், தெய்வீகம் என்ற கோட்பாடுகள் உருவாக்கிய பாதையில் இருந்து, இம்மி அளவும் விலகாமல், 75 ஆண்டுகளாக, டி.வி.ராமசுப்பையர் வகுத்த பாதையில், யாருக்கும் அஞ்சாமல், உண்மையை உரைத்து ‘தினமலர்’ பயணித்து வருகிறது. காரணம், வாசகர்களாகிய, நீங்கள் கொடுக்கும் தைரியம். அஞ்சல் தலை
வெளியிட்டு, மத்திய அரசு கொடுக்கும் இந்த அங்கீகாரம், தினமலருடையது மட்டுமல்ல. எங்கள் முதலாளிகளான வாசகர்களுக்கும் உரித்தானது” என்றார். இவ்விழாவில், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மேஜர் மனோஜ், தினமலர் மதுரை பதிப்பாளர் எல்.ராமசுப்பு, கோவை பதிப்பாளர் எல்.ஆதிமூலம், திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்பாளர் ஜெயஸ்ரீ வைத்தியநாதன், வேலூர் பதிப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, திருச்சி பதிப்பு ஆசிரியர் ஆர்.ராமசுப்பு ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, சட்டப்பேரவை பாமக தலைவர் சவுமியா அன்புமணி, விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.