குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆருடன் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி சந்திப்பு

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆருடன் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி சந்திப்பு
Updated on
1 min read

புது டெல்லி: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று சான்சிபார்( Zanzibar) அதிபர் டாக்டர் ஹுசைன் அலி மவின்யியைச் சந்தித்தார்.

டெல்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சான்சிபார்( Zanzibar) அதிபரும், அந்நாட்டின் புரட்சிகரக் கவுன்சிலின் தலைவருமான டாக்டர் ஹுசைன் அலி மவின்யியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு, இந்தியா – தான்சானியா இடையேயான நீடித்த கூட்டாண்மையையும், பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் கடல்சார், பண்பாட்டு மற்றும் மக்களிடையேயான உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்தியா – சான்சிபார் சிறப்புறவையும் மீண்டும் உறுதிபடுத்தும் விதமாக அமைந்தது.

வர்த்தகம், முதலீடு, வளர்ச்சிக் கூட்டாண்மை, சுற்றுலா, நீலப் பொருளாதாரம், கல்வி, ஐசிசிஆர் கல்வி உதவித் தொகைகள், ஐடெக் பயிற்சித் திட்டங்கள், தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பு என கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

தமது இந்திய பயணத்தில், சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்கு சென்று வந்தது சிறப்பான ஒன்றாக அமைந்ததாகவும் டாக்டர் ஹுசைன் அலி ம்வின்யி தெரிவித்தார். இருதரப்பு கல்வி ஒத்துழைப்பின் முக்கிய மைல்கல்லாகத் திகழும் ஐஐடி மெட்ராஸ் சான்சிபார் வளாகத்தை நிறுவ இந்தியா வழங்கிய ஆதரவையும் பாராட்டினார்.

பொதுவான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்காக முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தி, தான்சானியா மற்றும் சான்சிபாருடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக இருப்பதை குடியரசு துணைத் தலைவர் மீண்டும் வலியுறுத்தினார்.

சான்சிபாருடனான உறுதியான தொடர்பை உள்ளடக்கிய நீண்டகால இந்தியா–தான்சானியா கூட்டுறவை மேலும் வலுப்படுத்தி, இந்தியா–ஆப்பிரிக்கா ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் விதமாக இந்தச் சந்திப்பு அமைந்தது.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆருடன் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி சந்திப்பு
“13 ஆண்டுகளுக்கு முன் தகுதித் தேர்வில் வென்ற 410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்குக” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in