

கோவை: 1998 பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையொட்டி, இந்து அமைப்புகள் சார்பில் கோவையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ம் தேதி, குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: கோவை தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த அப்பாவி மக்களை இந்நாளில் கனத்த மனதுடன் நினைவுகூர்ந்து, எனது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.
அது நம் தேசத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, இருண்ட பக்கமாகும். முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி கோவை வந்த நேரத்தில் நிகழ்ந்த இந்த கொடூர குண்டுவெடிப்புகள், பல குடும்பங்களின் வாழ்வில் ஆறாத காயங்களை ஏற்படுத்தி, நாட்டின் மனசாட்சியையே உலுக்கியது. அந்த நாளின் பயமும், பதற்றமும் நிறைந்த சூழ்நிலை இன்றும் என் நினைவில் ஆறாத வடுவாகப் பதிந்துள்ளது. அன்று நான் மயிரிழையில் உயிர் தப்பினேன்.
இந்நாளில் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவையும் பணிவுடன் நினைவுகூர்ந்து, துயரத்தில் வாழும் குடும்பங்களுடன் ஒருமித்த உணர்வில் நின்று, அவர்களது துயரங்களில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
இந்நாளில், அனைவரும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒன்றுபட்டு நின்று, அமைதி, ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் உறுதிமொழி ஏற்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.