

தமிழ்நாடு திருக்கோயில் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு கடந்த ஆண்டு 15 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் அனுப்பப்பட்டன.
அதேபோல, இந்த ஆண்டும் 15 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் அனுப்பப்படுகின்றன. முதல் கட்டமாக கடந்த 7-ம் தேதி 5 லட்சம் பாக்கெட்கள் அனுப்பப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக நேற்று 4 கன்டெய்னர் லாரிகள் மூலம் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் அனுப்பப்பட்டன. சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சபரிமலை பக்தர்களுக்காக ஜனவரி 5-ம் தேதி மேலும் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் அனுப்பி வைக்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 3,956 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் 4,000-வது கும்பாபிஷேகம் 2026 பிப்.8-ம் தேதி நடைபெற உள்ளது.
8,027 ஏக்கர் நிலங்கள் மீட்பு: 1,068 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,258 கோடி மதிப்பிலான 8,027 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1.49 லட்சம் எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.