

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அளித்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மக்களவை தலைவருக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விஹெச்பி மாநில இணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மக்களவைத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பாரம்பரியமிக்க தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பில் எந்த குறையும் கூற முடியாது.
ஆனால், சிறுபான்மையினர் வாக்கு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ், திமுக கூட்டணி எம்.பி.க்கள் நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி மனு அளித்துள்ளனர். இது நீதித் துறைக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த தீர்மானத்தை ஏற்றால், முக்கியமான வழக்குகளில் இனி நீதிபதிகள் சட்டத்துக்கு உட்பட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, அம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.
சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துணில் தீபம் ஏற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
சட்டத்தின் ஆட்சியை தமிழகத்தில் நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.