

முதல்வர் விஜய்
சென்னை: அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் விரிவுபடுத்தப்பட்ட ‘வெற்றிப் பயணம்’ திட்டம் நாளை (அக்.2) முதல் நடைமுறைக்கு வரும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் அக்டோபர் 2 முதல் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்” எனத் தெரிவித்துள்ளார்.
மகளிர் இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளான அக்.2 முதல் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதன் மூலம் முதல் கட்டமாக, மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம்.
கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரண கட்டணப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம். இதற்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடு இல்லை. திருநர்களும் இலவசமாக பயணிக்கலாம். இதை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும்.