

சென்னை: தொலைதூர பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் செல்லும் வகையில் வெற்றி பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் ‘தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் வசிக்கும் ஒவ்வொரு மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை தவெக அரசு முதன்மையாகக் கொண்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், காந்தியடிகள் பிறந்த நாளில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது’ என கூறியிருந்தார்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட மகளிர் கட்டணமில்லா வெற்றி பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று காலை 10 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி வைக்க உள்ளார்.
இதன்மூலம், மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம்.
மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் இத்திட்டம் பொருந்தும்.
7 போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்பட உள்ள 12,692 பேருந்துகளில் தினசரி 84.32 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன் பெறுவார்கள் என போக்குவரத்து துறை கூறியுள்ளது.
கதர் ஆடைகளை வாங்குவோம்
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘‘மகாத்மா காந்தி, அகிம்சை என்னும் ஆயுதத்தை ஏந்தியவர். ராட்டை என்னும் நூற்புச் சக்கரத்தின் மூலம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பொருளாதார சுதந்திரத்தையும், சுயசார்பையும் போதித்தார்.
ஒரு கதராடையை நாம் வாங்குவது, ஒரு நெசவாளரின் கைத்திறனுக்கு அளிக்கும் அங்கீகாரம். ஒரு கைவினைப் பொருளை நாம் வாங்குவது, ஒரு கைவினைஞரின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும்கதர் ஆடைகளையும், கைவினைப் பொருட்களையும் வாங்கி, நம் நூற்பாளர், நெசவாளர் மற்றும் கைவினைஞர்கள் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், ‘‘அக்.2 - காந்தி ஜெயந்தியன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் (செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்கள் நீங்கலாக) கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.