

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் ஏறுவதற்கு அலைமோதும் பெண் பயணிகள் கூட்டம். படம்: நா.தங்கரத்தினம்.
மதுரை: தவெக அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தால், பெண் பயணிகள் எண்ணிக்கை 40 சதவீதம் முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், தங்களுக்கான ‘வசூல் படி’ குறைந்துவிட்டதாக அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1 லட்சத்து 8 ஆயிரம் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த அதிமுக, திமுக ஆட்சிக்காலம் வரை, அரசு போக்குவரத்துக் கழக விதிப்படி ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும் தனி படி, ஓட்டுநர் படி, நடத்துநர் படி கொடுத்து வந்தனர். அவர்கள் ஓட்டும் வழித்தடத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு டிக்கெட் கட்டணம் வசூல் ஆகிறதோ, அதில் ரூ.100-க்கு ரூ.1 என்ற வீதத்தில் ‘வசூல் படி’ வழங்கப்பட்டு வந்தது.
கடந்த திமுக ஆட்சியில் மாநகர, நகர பேருந்துகளில் சாதாரண கட்டணப் பேருந்துகளில் மட்டும் மகளிருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டது. தவெக ஆட்சி அமைந்த நிலையில், கடந்த 2-ம் தேதி முதல் மாநகரங்களில் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் பகுதிகளில் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகள் என 12 ஆயிரத்து 692 பேருந்துகளில், இலவசமாக மகளிர் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினமும் 84.32 லட்சம் பெண் பயணிகள் பயனடைவார்கள் என தவெக அரசு தெரிவித்தது.
தவெக அரசின் மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பால் அரசு மாநகர, புறநகர் சாதாரண பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் எண்ணிக்கை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டதால், ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஒரு குறிப்பிட்ட அளவு ‘வசூல் படி’ (பேட்டா) நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அவ்வாறு எந்த வசூல் படி இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்துள்ள ஓட்டுநர், நடத்துநர்கள் வழக்கம்போல் டிக்கெட் கட்டணம் வசூலுக்கு ஏற்ப, ‘வசூல் படி’ வழங்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நடத்துநர்கள் கூறும்போது, “மாநகர, புறநகர் சாதாரண பேருந்துகளில் பெண்களுக்கு ஜீரோ டிக்கெட் வழங்கப்படுகிறது. வழக்கத்தைவிட பெண்கள் தற்போது அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வது அதிகரித்துள்ள நிலையில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வேலைப்பளு அதிகரி்த்துள்ளது. மகளிர் இலவச பயண திட்டத்துக்கான தொகையை அரசு நேரடியாக போக்குவரத்து நிர்வாகத்துக்கு செலுத்தி விடுகிறது.
ஆனால், களத்தில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இதற்கான ‘வசூல் படி’ கிடைப்பதில்லை. 100 பயணிகளில் 60 பெண் பயணிகள் பேருந்துகளில் ஏறும் நிலையில், அந்த 60 பயணிகளுக்கான ‘வசூல் படி’ கொடுக்கப்படுவதில்லை. ஆண்களுக்கான டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே ‘வசூல் படி’ கொடுக்கப்படுகிறது.
இதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஓட்டுநர், நடத்துநர்கள் இதுவரை பெற்றுவந்த வசூல் படியில் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதனால் தமிழக அரசும், போக்குவரத்து நிர்வாகமும் நாள் ஒன்றுக்கு நிரந்தரமாக வசூல் தொகை ரூ.20,000 என கணக்கிட்டு அதற்குரிய வசூல் படியை ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழங்க வேண்டும்” என்றனர்.
இதுபற்றி போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, “அரசுப் பேருந்துகளில் டிக்கெட் கட்டண வசூல் அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல் படி வழங்கப்படும். வெற்றிப் பயணம் திட்டத்தால் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் டிக்கெட் கட்டண வசூல் குறைந்துள்ளது. இதனால் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழங்கப்படும் வசூல் படி அளவும் குறைந்துள்ளது.
இருப்பினும் வெற்றிப் பயண திட்ட பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் எண்ணிக்கை, கட்டண விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த டிக்கெட்களையும் அரசு கட்டண டிக்கெட்டாக கணக்கில் வைத்து அதற்கான வசூல் படி வழங்க போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி கிடைத்துவிடும் என நம்புகிறோம். அதன்பிறகு இலவச பயண டிக்கெட்டுக்கான வசூல் படி ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழங்கப்படும்’’ என்றார்.