

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
தவெக தலைவரான நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப்படம் ‘ஜனநாயகன்’. இப் படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன.9-ம் தேதி வெளியிட படத் தயாரிப்புக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், மறுஆய்வுக்கு அனுப்பியது.
இதை எதிர்த்து படத்தயாரிப்பு குழு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷ, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஜன.9-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஜன.20-க்கு தள்ளி வைத்தது.
இந்த இடைக்கால தடையை எதிர்த்து படக்குழு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வையே நாட அறிவுறுத்தியது.
உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஜன.20-ம் தேதி விசாரித்து, கூடுமானவரை அன்றைய தினமே உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறி மனுவை முடித்து வைத்தனர். அதன்படி, தணிக்கை வாரியம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்தது குறித்து கடந்த ஜன.5-ம் தேதியே படத்தயாரிப்பு குழுவுக்கு ‘இ-சினி ப்ரம்மான்’ என்ற இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.
ஆனால், படத்தயாரிப்பு குழு சான்றிதழ் கோரி ஜன.6-ம் தேதி வழக்கு தொடர்ந்து ஜன.9-ம் தேதி தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்றுள்ளது. கேட்காத பரிகாரத்தை தனி நீதிபதி கொடுத்தது சட்டத்துக்கு புறம்பானது” என்றார். படத்தயாரிப்பு குழு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர், “தனி நீதிபதி தீர்ப்பு வழங்கிய மறுநிமிடமே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.
தணிக்கை வாரிய நடவடிகையால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை” என்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “நீதிமன்ற நடைமுறைகளை முடித்து ஒரே நாளில் தீர்வு வேண்டும் என படத்தயாரிப்பு குழு கோருவதை ஏற்க முடியாது.
சான்றிதழ் பெறும் முன் வெளியீட்டு தேதியை முடிவு செய்யக் கூடாது. இயற்கை நீதியைப் பின்பற்றித்தான் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியும் எனக்கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.