

சென்னை: கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் மதுவை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த நிதி ஆண்டில் தமிழகத்தில் சுமார் 4,765 அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் தமிழக அரசு கடந்த 12-ம் தேதி 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.
இதில் 436 கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த மதுக்கடைகள் தினசரி மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை இயங்குகின்றன. தினசரி சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது.
கொலை, பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இதற்கிடையே, சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கடந்த 30-ம் தேதி நடனமாடிய இலங்கைத் தமிழ் இளம்பெண் யான்சிக்கும், சுமன் சக்திவேல் உள்ளிட்ட மூவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.
பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்ட பின்னர், யான்சி தன்னுடன் இருந்த 10 வயது சிறுமியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சுமன் சக்திவேல் தனது இரு நண்பர்களுடன் காரில் வந்து அவர்களது வாகனத்தின் மீது வேண்டுமென்றே மோதியுள்ளார்.
இதில் யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற சிறுமி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறுகிறார். இந்த கொலை தொடர்பாக சுமன் சக்திவேல் உள்ளிட்ட மூவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 2 நாட்களில் சென்னையில் மட்டும் மது போதையால் 2 பாலியல் வன்கொடுமை மற்றும் ஒரு கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படை காரணமான மதுவை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.