

ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 சதவீதமும், அரசுத்துறைகளில் 100 சதவீதமும் தமிழர்களுக்கு வேலை என்றவேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை ஜனவரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.
என்எல்சி, துப்பாக்கி தொழிற்சாலை, வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பொது நிறுவனங்களில் மத்திய அரசு அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு 100 சதவீதம் வேலை வழங்க வேண்டும். வடமாநிலங்களில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினர் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கிறிஸ்தவர்களைத் தாக்கினர். இதுதொடர்பாக நடிகர் விஜய் வாய் திறக்கவில்லை. அதேபோல திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பு முற்படுகிறது. தமிழகத்தில் சினிமா மூலம் ஈர்ப்பை பெற்றுள்ள விஜய், இதற்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை. சமூக ஒற்றுமை குறித்து பேச்சே இல்லை. மதவாத கும்பலை ஏன் விமர்சனம் செய்ய மறுக்கிறார்? இதன் மூலம் விஜய்யின் இரட்டை வேடம் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.