“தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக தரும் ஆதரவே போதுமானது” - மு.வீரபாண்டியன் கருத்து

“தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக தரும் ஆதரவே போதுமானது” - மு.வீரபாண்டியன் கருத்து
Updated on
2 min read

விழுப்புரம்: தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக தரும் ஆதரவே போதுமானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற முதல்வர் விஜய்யின் கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்க வேண்டும். தேசபக்தி பாடல்களுக்கு தமிழகம் எதிரானது அல்ல. அதேநேரத்தில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

வான்வழி அமைப்பு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் இடம்பெறுவது சரியல்ல.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கருத்துகளை கேட்காமல், மேகேதாட்டு அணை கட்டுவதை ஏற்க இயலாது.

மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்துவது தொடர்கிறது. கடலில் தவறுவதலாக திசை மாறி செல்லும் மீனவர்களை, அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். தாக்குதல் தொடுக்கக் கூடாது என சர்வதேச சட்டம் உள்ளது. சிறைபிடிப்பது, வலைகளை அறுப்பது, மீன்களை கடலில் கொட்டுவது, சொத்துகளை அழிப்பதை ஏற்க இயலாது. மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நட்பு நாடான இலங்கை, அதற்கேற்ப இலக்கணத்துடன் செயல்பட வேண்டும்.

பல்கலைக்கழக வேந்தர் நியமனத்தில் போராடி பெற்ற உரிமையை தமிழக அரசு விட்டுக் கொடுக்கக் கூடாது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்த கருத்து ஏற்புடையது அல்ல. இதில் முதல்வர் விஜய் உறுதியாக இருக்க வேண்டும்.

கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். கீழடி ஆய்வு தொடர்வதற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்வது கடமையாகும்.

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ஆட்சிக்கு வந்த 12 ஆண்டுகளில், பாஜக தலைவரின் ஒருவரது வீட்டில் கூட அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படவில்லை. யார் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறதோ அவர்கள் பாஜகவில் இணைந்துவிட்டால் சுத்தமாகி விடுகிறார்கள். பாஜக என்ன சுத்தம் செய்யும் இயந்திரமா? வழக்கும் அமைதியாகிவிடுகிறது. இடதுசாரி தலைவர்களின் வீடுகளில் எத்தனை ஆண்டுகள் சோதனை நடத்தினாலும் கொள்கை சார்ந்த புத்தகங்கள்தான் இருக்கும். இதனை எடுத்து சென்று படித்தால், புத்தியை வளர்த்திக் கொள்ளலாம்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் அதிமுகவினர் இணைவது என்பது தமிழக மக்கள் மற்றும் தீர்ப்புக்கும், அரசியல் நெறிகளுக்கும் மாறானது. இதை ஏற்க இயலாது. தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக தரும் ஆதரவே போதுமானது.

தவெக ஆட்சி ஐந்தாண்டு நீடிக்காது என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து கேட்கிறீர்கள். இதுபோன்ற கருத்துகள் ஏற்படுவது இயல்பு. மக்கள் வாக்களித்துள்ளனர், இடதுசாரிகள் ஆதரித்துள்ளோம், ஐந்தாண்டுகள் தவெக ஆட்சி நீடிப்பது நல்லது. மக்களின் எதிர்பார்ப்புகளை, வாக்குறுவதிகளை நிறைவேற்றும் நல்லாட்சியாக இருக்க வேண்டும். ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்ற நல திட்டங்கள் தொடர வேண்டும். விவசாய கடன் தள்ளுபடியில் முதல்வர் விஜய் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏகளுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் இடதுசாரிகளின் முடிவு என்ன என கேட்கிறீர்கள். அந்தக் காலச் சூழலில் கணித்து முடிவு செய்யப்படும். ஒரு தலைவராக சொல்வதைவிட, ஒன்றுகூடி கருத்தை சொல்வோம்.

இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் குறித்து பாமக தலைவர் அன்புமணியின் கருத்து குறித்து கேட்கிறீர்கள். இதற்கு பொறுத்திருக்கலாம். 100 ஆண்டு கால வரலாற்றில், எந்த ஆட்சியையும் நாங்கள் கவிழ்த்ததாக வரலாறு இல்லை. மன்மோகன் சிங் ஆட்சியில், ஆதரவை மட்டுமே நாங்கள் வாபஸ் பெற்றோம்.

வாரியத் தலைவர் பதவி, அமைச்சர் பதவியை நாங்கள் கேட்கவில்லை. அரசு ஊழயர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராடுவோம்.

பிரதமரே முதல்வர் விஜய்யை சந்தித்தபோது, உள்துறை அமைச்சரை சந்திருக்க வேண்டும். எப்போதுமே சட்டத்தை உள்துறை கடந்து செல்லும். மாநில உரிமையில் அப்பட்டமாக தலையீடு இருக்கும். வெளிப்படையாக உள்துறை இருந்தது இல்லை. சந்தேகம் எழுவது இயல்புதான்” என்று அவர் கூறினார்.

“தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக தரும் ஆதரவே போதுமானது” - மு.வீரபாண்டியன் கருத்து
“திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலப் பணிகளை நிறுத்தி, ஊழல் ஒப்பந்தத்தை ரத்து செய்க” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in