விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு: தமிழக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம்

வன்னியரசுக்கு சமூக நீதி, ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலம்
சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் வன்னியரசு, ஷாஜகான் ஆகியோருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் வன்னியரசு, ஷாஜகான் ஆகியோருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Updated on
2 min read

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை 2-வது முறையாக நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விசிகவின் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் ஷாஜகான் ஆகிய இருவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வன்னியரசுக்கு சமூக நீதித் துறையும், ஷாஜகானுக்கு வக்பு வாரியம், சிறுபான்மையினர் நலத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டது. முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றார்.

அவருடன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். அவர்களுக்கான இலாகாக்கள் சமீபத்தில் ஒதுக்கப்பட்டன. இதன் பிறகு, காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகிய இருவர் அமைச்சரவையில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆதரவு அளித்த மற்ற கட்சிகளும் அமைச்சரவையில் இணையுமாறு தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. விசிக, ஐயூஎம்எல் இந்த அழைப்பை ஏற்ற நிலையில், அமைச்சரவையில் பங்கேற்கப் போவதில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்தன. இந்த நிலையில், அமைச்சரவை நேற்று முன்தினம் (21-ம் தேதி) விரிவாக்கம் செய்யப்பட்டது.

காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள், தவெகவின் 21 எம்எல்ஏக்கள் என 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்களுக்கான இலாகாக்களும் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், முதல்வரின் அழைப்பை ஏற்று, விசிக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், திண்டிவனம் எம்எல்ஏவுமான வன்னியரசு அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். ஐயூஎம்எல் சார்பில் பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சரவையில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆளுநர் மாளிகையில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் விஜய் முன்னிலையில், வன்னியரசு, ஷாஜகான் ஆகிய 2 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா (மே 10), முதலாவது விரிவாக்கம் (மே 21) போலவே நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவிலும் வந்தேமாதரம், தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, புதிய அமைச்சர்கள் 2 பேருக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வன்னியரசுக்கு சமூகநீதித் துறையும், ஷாஜகானுக்கு வக்பு வாரியம், சிறுபான்மையினர் நலத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த ஆதிதிராவிடர், மலைப் பழங்குடியினர் துறை தற்போது சமூக நீதித் துறையாக மாற்றப்பட்டுள்ளது. விசிக, ஐயூஎம்எல் உறுப்பினர்கள் முதல்முறையாக அமைச்சர் ஆகியுள்ளதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அமைச்சரவையில் 35 பேர்: எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில் அதிகபட்சம் 15 சதவீதம் வரை அமைச்சர்கள் இருக்கலாம். தமிழகத்தில் 234 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அமைச்சரவையில் அதிகபட்சம் 35 அமைச்சர்கள் இடம்பெறலாம். நேற்று 2 பேர் இணைந்த நிலையில், முதல்வர் விஜய் உட்பட தமிழக அமைச்சரவை 35 என்ற முழு எண்ணிக்கையை எட்டியுள்ளது.

<div class="paragraphs"><p>சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் வன்னியரசு, ஷாஜகான் ஆகியோருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  </p></div>
மேகேதாட்டு விவகாரம்: டி.கே.சிவகுமாருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in