

திருச்சி: தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மை தான் எனவும், அமைச்சருக்கு அதிகாரிகள் சரியான தகவல்களை அளிக்க வேண்டும் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திமுகவில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் வரம்பு மீறிய விமர்சனங்களுக்கு நாகரிகமான முறையிலேயே பதிலளித்துள்ளனர். ஆனால் ஆ.ராசா, சேகர்பாபு பேசியது மக்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது.
பயிர்க் கடனை தள்ளுபடி செய்வது குறித்து முதல்வர் விஜய்யிடம் எடுத்துக் கூறியுள்ளேன். தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு இருப்பது உண்மை தான். அதை துறை சார்ந்த அமைச்சர் உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை என அதிகாரிகள் கூறுவதைத்தான் அமைச்சர் கூறுகிறார். எனவே, அமைச்சருக்கு அதிகாரிகள் சரியான தகவல்களை அளிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் இருந்து பதவி ஆசைக்காகத் தான் விசிக வெளியேறியது என திமுகவினர் விமர்சிப்பது, துரோக பட்டம் சூட்டுவது சரியான அணுகுமுறை அல்ல. அக்கட்சியின் வெற்றிக்காக உழைத்துள்ளோம். எனவேதான் திமுக தன்னை மீண்டும் சுய விமர்சனம் செய்ய கூறினேன். இவ்வாறு அவர் பேசினார்.